பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட 5 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் முழுமையாக விற்று தீர்ந்ததால் கவுண்டர்களில் காலை முதல் காத்திருந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காகவும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட 5 சிறப்பு கட்டண ரயில்கள் அறிவிக்கப்பட்டு இன்று காலை 8 மனிக்கு முன்பதிவு தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
அதன்படி ஜனவரி 12-ம் தேதி தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு இரவு 9 மணிக்கும் , ஜனவரி 13-ம் தேதி நெல்லையிலிருந்து எழும்பூருக்கு மதியம் 1 மணிக்கும், இதேபோல் தாம்பரத்தில் இருந்து நாகர்கோயிலுக்கும், மறு மார்கமாக நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கும் சென்னை சென்ட்ரலில் இருந்து எர்ணாகுளத்திற்கும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு ஆன்லைன் மற்றும் ரயில்வே முன்பதிவு டிக்கெட் கவுண்டர்களில் தொடங்கியது. முன்பதிவு தொடங்கி 8 நிமிடங்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில் ரயில்வே டிக்கெட் கவுண்டர்களில் வரிசையில் காத்திருந்த பயணிகள் ஏமாற்றமடைந்து திரும்பி சென்றனர்.
மேலும் பொங்கல் பண்டிகைக்கு ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடும் என்பதால் மேலும் கூடுதல் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கலை.ரா
பொங்கலுக்கு வேட்டி சேலை வழங்காவிடில்… : எடப்பாடி எச்சரிக்கை!
பார்வையற்றவரிடம் ரூ. 3 லட்சம் மோசடி: 2 பெண்கள் கைது!