pongal price amount announced

பொங்கல் பரிசுத் தொகை அறிவிப்பு: எவ்வளவு தெரியுமா?

தமிழகம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பரிசுத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்புடன் பரித் தொகையும் வழங்கப்படும்.

இந்நிலையில் இந்த ஆண்டு ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு முழு கரும்பு மட்டுமே வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 பரிசுத் தொகை வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

மேலும் பொங்கல் பரிசுத் தொகை குறித்து முதல்வர் தான் முடிவெடுப்பார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 பரிசுத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு அரசு இன்று (ஜனவரி 5) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு ஒரு பண்டிகை பொங்கல் திருநாளாகும். இந்த நன்னாள் அனைத்துத் தொழில்களுக்கும், ஏன், மனித குலத்திற்கே அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாகவும் தமிழர்களாகிய அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளை முன்னிட்டு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 2-1-2024 அன்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

மேலும், முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தி செய்த காரணத்தினால், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து, இவற்றை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட, ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை, இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக, அதாவது, வரும் 10 ஆம் தேதியன்றே, மகளிர் உரிமைத் தொகை பெற்றுவரும் 1 கோடியே 15 இலட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

திட்டமிட்டபடி வேலை நிறுத்தம்: போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க தடையில்லை: உச்சநீதிமன்றம்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *