பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிராம பகுதிகளில் பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். போதிய அளவு களிமண் கிடைக்காததால் பானை விலை உயரும் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான ஆர்.பொன்னாபுரம், முத்தூர், வடக்கிபாளையம், கோட்டூர், ஒடையக்குளம், தேவபட்டினம், சேத்துமடை, அம்பராம்பாளையம், சமத்தூர், அங்கலக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் மண்பாண்ட தொழில் அதிக அளவில் நடக்கிறது.
சமையலுக்கு தேவையான பானை மட்டுமின்றி பொங்கல் போன்ற முக்கிய விசேஷ தினங்களை முன்னிட்டு மண்பாண்ட தொழில் பரபரப்பாக இருக்கும்.
இந்த நிலையில் இந்த ஆண்டு வருகிற 15-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானை தயாரிப்பில் தொழிலாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
களிமண்ணால் செய்யப்படும் பானைக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், பலர் ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர். சிறியது முதல் பெரிய அளவிலான பானை தயாராகி வருகிறது.
இருப்பினும், இந்த முறை பானை தயாரிப்பதற்கு உண்டான களிமண் போதிய அளவு கிடைக்காததால் அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொங்கல் பானை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
விலை உயர்வு குறித்து பேசியுள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், “ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது ஒரு மாதத்திற்கு முன்பாகவே பானை தயாரிப்பில் ஈடுபடுவோம். இந்த ஆண்டு பொங்கலுக்கு தேவையான பானை தயார் செய்து, மார்க்கெட்டில் விற்பனைக்கு அனுப்பிவைப்பதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.
பொங்கல் நெருங்குவதை முன்னிட்டு பொள்ளாச்சி மட்டுமின்றி, உடுமலை, பழனி, பல்லடம், சுல்தான்பேட்டை, நெகமம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து ஆர்டர்கள் வந்துள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொங்கல் பானை ரூ.20 முதல் ரூ.30 வரை உயர்ந்ததற்கு காரணம், போதிய அளவு களிமண் கிடைக்காததே.
இதனால் அதிக விலைக்கு பானைகள் விற்பனை செய்ய வேண்டியுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
பெல் நிறுவன கொள்முதல் குறைந்ததற்கு யார் காரணம் ? – ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்!
பியூட்டி டிப்ஸ்: புருவம் அடர்த்தியாக… பூனைமுடி உதிர…