பொங்கல் விடுமுறை : கோயம்பேடு டூ கிளாம்பாக்கம் அலைக்கழிக்கப்படும் மக்கள்… தப்பிக்க என்ன வழி?

தமிழகம்

பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல அரசு பேருந்தில் முன்பதிவு செய்த பயணிகள் கோயம்பேடு, கிளாம்பாக்கம் என அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், அரசு வழிகாட்டி நெறிமுறைகளை இன்று (ஜனவரி 11) வெளியிட்டுள்ளது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக ஒவ்வொரு ஆண்டும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டு வரும் 15ஆம் தேதி பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், வழக்கம்போல சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து பல இடங்களுக்கும் நாளை முதல் மூன்று நாட்களுக்கு (ஜனவரி 12-14) சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அதன்படி, சென்னையில் இருந்து வழக்கமாக தினமும் இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 4,706 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கு மொத்தம் 11,006 பேருந்துகளும், திருச்சி, கோவை உள்ளிட்ட பிற நகரங்களில் இருந்து 8,478 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம், பொங்கல் பண்டிகைக்காக 3 நாட்களுக்கு சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து மொத்தம் 19,484 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பொதுமக்கள் புகார்!

இதற்கிடையே பொங்கல் விடுமுறையில் சொந்த ஊருக்கு அரசு பேருந்துகளில் செல்வதற்காக முன்பதிவு செய்திருந்த பொதுமக்களை கோயம்பேடு வரும் பொதுமக்களை கிளாம்பாக்கத்திற்கும், கிளாம்பாக்கம்  வருவபவர்களை கோயம்பேடு செல்லுங்கள் எனவும் அதிகாரிகள் மாறி மாறி அறிவுறுத்தி வருகின்றனர்.

இதனால் குழப்பம் ஏற்படுவதோடு, பொங்கலுக்கு குடும்பத்துடன் பயணம் மேற்கொள்வோர், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் தாங்கள் கோயம்பேடு – கிளாம்பாக்கம் இடையே அலைக்கழிக்கப்படுவதாக சமூகவலைதளங்களில் புகார் தெரிவித்து வருகின்றனர்.

யார் கிளாம்பாக்கத்திற்கு செல்ல வேண்டும்?

இதனையடுத்து தமிழ்நாடு அரசு இன்று பொதுமக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “தேசிய நெடுஞ்சாலை (NH-45) வழியாக இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் (SETC) செல்ல கடந்த டிசம்பர் 30ஆம் தேதிக்கு முன்பு கோயம்பேடு, தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம், விழுப்புரம் மார்க்கமாக இயக்கும் பேருந்தில் முன்பதிவு செய்திருக்கும் பயணிகள் அதற்கு பதிலாக கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம் சென்றடைந்து, அங்கு தாங்கள் கோயம்பேட்டில் முன்பதிவு செய்த நேரத்திற்கு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதே மார்க்கத்தில் செல்லும் விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி மூன்றுக்கு இரண்டு இருக்கை (3X2) கொண்ட பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்தவர்களும் பிற முன்பதிவு செய்யாத பயணிகளும் விழுப்புரம், திருச்சி மார்க்கமாக பயணிக்க கோயம்பேட்டிற்கு வரவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஜனவரி 12 முதல் ஜனவரி 14 வரை  முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கான விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் மட்டுமே கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும்.

NH45 தேசிய நெடுஞ்சாலை வழியாக கும்பகோணம் மார்க்கமாக இயங்கும் பேருந்துகளில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்தும் (KCBT),

அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) கழகத்தைச் சார்ந்த பேருந்துகள் தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்திலிருந்தும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்கின்ற நாகப்பட்டினம், கும்பகோணம், திருத்துறைபூண்டி செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயங்கும் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

ஆறு இடங்களில் புறப்புடும் சிறப்பு பேருந்துகள்! 

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் (மூன்றுக்கு இரண்டு இருக்கை (3X2))  விடப்படுகிறது.

1. பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலம் செல்லும் பஸ்கள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

2. புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகரில் இருந்து இயக்கப்படுகிறது.

3. திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

4. ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

5. விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், கோவை, நெல்லை கோட்டங்களை சேர்ந்த பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

6. திருச்சி, தஞ்சை, கரூர், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் (SETC)  கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

முன்பதிவு செய்ய வசிதியாக…

நாளை முதல் 14-ந்தேதி வரை அரசு பஸ்களில் பயணம் மேற்கொள்வதற்கு முன்பதிவு செய்ய வசதிவாக கோயம்பேடு, கிளாம்பாக்கம், தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையங்களில் மொத்தம் 11 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், www.tnstc.in என்ற இணைதளம் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம்.

இணைப்புப் பேருந்துகள் செயல்படும்!

இந்த நிலையில் பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மேற்கூறிய மாதவரம் புதிய பேருந்து நிலையம், கலைஞர் கருணாநிதி நகர் (கே.கே. நகர்) பேருந்து நிலையம், தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (MEPZ), வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம், பூவிருந்தவல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிறுத்தம் (பூவிருந்தவல்லி மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை அருகில்), மற்றும் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT) ஆகிய பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 450 சிறப்பு இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்பட உள்ளது.

சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள்!

பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வர வருகிற 16-ந்தேதி முதல் 18- ந்தேதி வரை தினமும் இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,830 சிறப்பு பேருந்துகளும், மற்ற நகரங்களுக்கு 6,459 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 17,589 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

பயணிகளின் வசதிக்காக 24×7 கட்டுப்பாட்டு அறை!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 9445014450, 9445014436 ஆகிய தொலைபேசி எண்களை (24×7) மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 (Toll Free Number) மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதுமட்டுமின்றி, பயணிகளின் நலன் கருதி, அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை (Control Room) 24 மணி நேரமும் செயல்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மேலும், பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக 20 இடங்களில் தகவல் மையங்கள் (May I Help You) அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க முன்பதிவு வசதியினை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

விடைபெறுகிறது வடகிழக்கு பருவமழை!

பொங்கல் போட்டியில் ஜெயிக்க போவது யார்?

+1
0
+1
0
+1
2
+1
5
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *