”பொங்கல் பரிசாக விவசாயிகளிடமிருந்து கரும்பை கொள்முதல் செய்து, உழவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்” என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழர் திருநாளான தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தமிழ்நாடு அரசின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. அதிமுக அரசு காலத்தில் கடந்த 2020 பொங்கல் பண்டிகைக்கு 1,000 ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பும், 2021இல், பரிசுத் தொகுப்புடன் 2,500 ரூபாய் ரொக்கம் உயர்த்தி வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, திமுக தலைமையிலான மு.க.ஸ்டாலின் அரசு, கடந்த பொங்கலுக்கு 21 பரிசுத் தொகுப்பை மட்டும் வழங்கியது. தமிழக அரசு வழங்கிய இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பில், அதிக குளறுபடி நடந்ததாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்தன. பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் விநியோகிக்கப்பட்டதே அதற்குக் காரணம்.
இதையடுத்து, தவறு செய்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பினால் கடும் விமர்சனத்துக்குள்ளானதால், வரும் 2023ஆம் ஆண்டுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி கவனமாக ஆலோசனைகளைத் தொடங்கினார் முதல்வர் ஸ்டாலின்.
அதன்படி, வரும் பொங்கலுக்கு அரிசி மற்றும் சர்க்கரையுடன் ரொக்கமாக ரூ.1,000 பணம் வழங்கப்படும் என தமிழக அரசு நேற்று அறிவித்தது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கும் எதிர்க்கட்சிகளிடமிருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசாக ரூ.5,000 வழங்க வேண்டும் என்றும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ரூ.3,000 வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர். அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2,500 ரூபாய் வழங்கப்பட்டது.
”இந்த அரசு பொங்கல் தொகுப்பில் உள்ள அரிசி மட்டும் சர்க்கரையுடன் வெறும் 1,000 ரூபாய் மட்டுமே தர இருக்கிறது. கடந்த காலங்களில் முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் தொகையும் உயர்த்தி வழங்கப்பட்டது” என்று மக்களும் பொதுவான விமர்சனத்தை வைத்து வருகின்றனர். அதிலும் கரும்பு வழங்கப்படாதது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இன்று (டிசம்பர் 23) தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் தமிழர் திருநாளையொட்டி, அரிசி அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு தமிழக அரசு அளிக்கவிருக்கும் பரிசுத் தொகுப்பில் பொங்கல் கரும்பு வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது.
இது கரும்பு உழவர்கள் நலனை கடுமையாக பாதிக்கும். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டும் அதே நடைமுறையே தொடரும்; அரசு கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்கான ஏக்கரில் உழவர்கள் பொங்கல் கரும்பு சாகுபடி செய்திருக்கின்றனர்.
பொங்கல் கரும்பை வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது. பொங்கலுக்கு இன்னும் 3 வாரங்களே உள்ளநிலையில் தமிழக அரசு கொள்முதல் செய்யவில்லை என்றால் வெளிச்சந்தையில் கரும்பு விலை வீழ்ச்சியடையும். அந்த விலைக்கு விற்றால் விதை வாங்கிய செலவைக் கூட உழவர்களால் ஈடு செய்ய முடியாது. பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதில் கடந்த ஆண்டு குளறுபடிகள் நடந்தது உண்மை. அதற்கு நிர்வாகத்தில் நடந்த தவறுகள் தான் காரணம் ஆகும்.
அதைக் காரணம் காட்டி பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்குவதை நிறுத்தியதால், உழவர்கள் தான் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஜனவரி 2 ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ள பரிசுத் தொகுப்பில் கரும்பை அரசு சேர்க்க வேண்டும். ஒரு கரும்பு ரூ.35 என்ற விலையில் தமிழக அரசே உழவர்களிடமிருந்து நேரடியாக பொங்கல் கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும். அதன் மூலம் உழவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.
கடந்த பொங்கல் பரிசுத் தொகுப்பின் சில குடும்ப அட்டைத்தாரர்களுக்கு கரும்பு வழங்கப்படவில்லை என்பதும், அதில் சிலருக்கு ஒரு துண்டு கரும்பு மட்டுமே விநியோகிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்
விஞ்ஞானி விருது: 10 லட்சம் நட்ட ஈடு தர உத்தரவு!
எல்லைப் பிரச்சினை: கர்நாடகம்போல் களத்தில் இறங்கிய மராட்டியம்