90 நாட்களுக்கு முன்பே அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வந்ததையடுத்து, பொங்கல் பண்டிகைக்குச் செல்லும் பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்காக சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட வெளியூர்களில் வசித்து வரும் பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். இதற்காக, சிறப்புப் பேருந்துகளும், ரயில்களும் இயக்கப்படும்.
குறிப்பாக, தமிழ்நாடு அரசு 10,000-க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்குவது வழக்கம். தற்போது ரயில்களில் 60 நாட்களுக்கு முன்புதான் பதிவு செய்யப்படும் என்கிற நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் அரசு பேருந்துகளில் பயணிக்க 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்வதற்கான வசதியை அமல்படுத்தியுள்ளது.
இந்தப் பேருந்துகள் பொங்கலுக்கு அரசு சார்பில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் அல்ல. வழக்கமான நாட்களில் இயக்கப்படும் பேருந்துகள் ஆகும்.
இந்தப் பேருந்துகளில் பயணம் செய்ய தமிழ்நாடு அரசின் இணையதளமான www.tnstc.in அல்லது TNSTC அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பொங்கல் நெருங்கும் நேரத்தில் பேருந்துகளை முன்பதிவு செய்வதில் ஏற்படும் சிரமத்தை தவிர்ப்பதற்காக பொதுமக்கள் முன்கூட்டியே பேருந்துகளை பதிவு செய்து கொள்ள அரசு, போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பொங்கல் பண்டிகை நெருங்கும் நேரத்தில் பொங்கல் சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு வெளியாகும். அப்போது கோயம்பேடு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் மாதவரத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
பொதுமக்கள் கிளாம்பாக்கம் செல்வதற்காக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
இதற்கு முன்பாக, முன்பதிவு செய்து அரசுப் பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கு இருசக்கர வாகனம், எல்இடி டிவி, ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மினி இட்லி வித் சாம்பார்
கங்குவா – விற்கு எதிரான ஆதங்கம்… கவுன்சிலருக்கு எதிராக வருவதில்லை ஏன்? : இயக்குநர் கேள்வி!
நயன்தாரா நடிக்கும் ’ராக்காயி’!
மணிப்பூர் கலவரம்: மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த அமித்ஷா