பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி 15) கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை வரவேற்கும் வகையில் மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று தமிழ்நாடு முழுவதும் போகி பண்டிகை கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் பொங்கல் திருநாளுக்கு அரசியல் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி
டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பேசும் போது, “இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்” என்று தமிழில் வாழ்த்துக் கூறினார்.
முதல்வர் ஸ்டாலின்
“தாய் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என் இனிய தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். ஆண்டுக்கொரு நாள், அருமைமிகு திருநாள், பொங்கல் புது நாள். நமக்கென்று உள்ள ஒப்பற்ற விழா. இதற்கு ஒப்பான நாள் உலகில் எங்குமில்லை என்று பேரறிஞர் அண்ணா சொன்னார்.
களம் காண்பான் வீரன் என்றால் நெற்களன் காண்பான் உழவனின் மகன். போர் மீது உறங்குதலே வீரன் வேலை. வைக்கோல் போர் மீது உறங்குதலே உழவன் வேலை. உழவனுக்கும் வீரனுக்கும் ஒற்றுமைகள் பலவுண்டு. வேற்றுமையோ ஒன்றே ஒன்று தான். உழவன் வாழவைப்பான், வீரன் சாகவைப்பான் என்று எழுதினார் கலைஞர்.
உழவு என்பது தமிழர்களின் தொழில் மட்டுமல்ல. பண்பாட்டு மரபு. அதனால் தான் தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக பொங்கல் திருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
என் பேரன்பிற்குரிய தமிழ் நிலத்தின் உடன்பிறப்புகளே, அன்பு பொங்க, ஆசை பொங்க, இன்பம் பொங்க, ஈகை பொங்க, உண்மை பொங்க, ஊரே பொங்கட்டும். இனிய பொங்கல் இந்தியாவின் பொங்கலாக மாற போகிற ஆண்டு இது. அனைவருக்கும் என் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
”தமிழர் திருநாள், உழவர் திருநாள், அறுவடை திருநாள், இயற்கைக்கு நன்றி செலுத்தும் நாள் என பல பெயரிட்டு அழைக்கப்படும் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மநீம தலைவர் கமல்ஹாசன்
”இயற்கையை வாழ்த்தும் நாள், உழைப்பில் உதவும் சக உயிர்களுக்கு நன்றி சொல்லும் நாள், விதைத்த பொருளின் விளைச்சலை பார்த்து விம்மிதம் கொள்ளும் நாள், சாதி மத பேதமின்றி தமிழர் கூடிக் கொண்டாடும் நாள். மகிழ்வுகளை அள்ளிவரும் தைப்பொங்கல் நாளில் வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி
”தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
இந்தியாவில் மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்துத் தரப்பு தமிழ் மக்களாலும் கொண்டாடும் இந்த பொங்கல் விழா, விவசாயிகள் விளைவித்த பயிர்களை அறுவடை செய்ய அத்தனை நாளும் தமக்கு உதவிய சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபடும் நன்னாளாகும்.
அனைவரது உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கிப் பரவ தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பொங்கல் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன்
”உழைப்பைப் போற்றும் திருவிழா தான் தமிழர்கள் போற்றும் தமிழினத்தின் பொங்கல் திருவிழாவாகும். தமிழ்நாடு மற்றும் உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று வாழ்த்துக் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
டெல்லியில் பொங்கல் கொண்டாடிய மோடி
இளம் வீரரைப் பார்த்து கோபமாகக் கத்திய ரோஹித்… உண்மையில் என்ன நடந்தது?