Pongal celebration in Isha by Sadhguru
|

பொங்கல் கொண்டாட்டம்…

சத்குரு

பொங்கல் விழா தமிழ் மக்கள் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒரு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மார்கழியின் நிறைவைக் குறிக்கும் போகிப் பண்டிகையின் நோக்கம், பொங்கல் விழா விவசாயிகளுக்கும் ஆன்மீகப் பாதையில் உள்ளவர்களுக்கும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் என அனைவருக்குமே முக்கியத்துவம் பெறுவதன் காரணம் ஆகியவற்றை விரிவாகப் பேசுகிறது இக்கட்டுரை

தைப்பொங்கல்

பொங்கல் திருவிழா, உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து தமிழ் மக்கள் இல்லங்களிலும் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் பொங்கல் திருவிழா ஈஷாவில் 15 ஜனவரி 2021அன்று ஆதியோகி முன்னிலையில் கொண்டாடப்பட உள்ளது.

கேளிக்கையும், குதூகலமும் நிறைந்த இந்நாளில், திறந்தவெளியில் அதியோகியின் முன்னிலையில் பொங்கலிடுதல் மற்றும் மாலையில் கலை நிகழ்ச்சிகளுடன்  சிறப்பு தரிசனமும் நடைபெறும்.

கொண்டாட்டமே வாழ்வின் அர்த்தம் நமது தேசத்தில் ஒரு காலத்தில் முன்னூற்று அறுபத்தி ஐந்து நாட்களும் ஏதோ ஒரு கொண்டாட்டம் இருந்தது. நமக்கு தினசரி கொண்டாட்டம்தான். வார இறுதி நாட்களில் மட்டும் கொண்டாட்டம், தினசரி அலுப்பூட்டும் பணி என்ற கருத்து மேற்குலக நாடுகளுக்கு உரித்தானது. தினசரி நாம் செய்யும் செயலில் உற்சாகம், கொண்டாட்டம் இல்லாமல் வெறும் பிழைப்புக்காக மட்டும் செயல்பட்டால், வாழ்க்கையில் பாதிப்புதான் ஏற்படும்.

வாழ்வே ஒரு பெரும் சுமையாக இருக்கும். செயலில் ஆனந்தமும், உற்சாகமும் இல்லையென்றால், வாழ்க்கை பரிசு வழங்காது, உடலில் நோயும், நரகமும்தான் உருவாகும். உங்களுக்கு வரவில்லையென்றால், நீங்கள் மற்றவர்களுக்கு உருவாக்கிவிடுவீர்கள். கொண்டாட்டம் இல்லாத ஒரு வாழ்க்கையை நல்லவிதமாக வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை.

மனிதனாகப் பிறந்து, இவ்வளவு புத்திசாலித்தனத்தை இயற்கை வழங்கியிருப்பதை உணர்ந்து, இதைத் தாண்டி ஏதோ ஒன்றை உருவாக்கவேண்டும் என்ற நோக்கம் இல்லாமல், மனிதன் வெறும் உணவுக்காகவே வாழ்ந்தால், அதற்கு ஒரு மண்புழுவாகப் பிறந்திருக்கலாம். விவசாயிக்காவது உபயோகமாக இருந்திருக்கும். ஆகவே செய்யும் செயலில் சந்தோஷமும், கொண்டாட்டமும் இணைந்திருப்பது நமது பாரம்பரியத்தில் வழக்கமாக இருக்கிறது.

இந்த நாட்டில் மண்ணில் ஏர் பூட்டுவதற்கு, விதைப்பதற்கு, களை எடுப்பதற்கு, அறுவடைக்கு என எல்லாவற்றுக்கும் ஒரு கொண்டாட்டம் உண்டு. கொண்டாட்டம் என்பது, ஆனந்தமாக, உற்சாகமாக செயல்படுவதற்கான ஒரு வழி. மதி நிறைக்கும் மார்கழித்திங்கள் பொங்கல் முக்கியத்துவம் பெறுவது ஏனென்றால், இது பயிர் அறுவடை செய்யும் தருணம்.

அதாவது நமது சாதனைக்கு, நாம் மேற்கொண்ட சிரமங்களுக்கு, ஒரு பலன் கிடைக்கின்ற நேரம்.
விவசாயப் பெருமக்களுக்கு மட்டுமல்லாமல், ஆன்மீகப் பாதையில் இருப்பவர்களுக்கும்கூட இது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தக் காலகட்டத்தை நாம் “கைவல்யபாதை”, என்று கூறுவோம். மகாபாரதத்தில் பீஷ்மர் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். போர்க்களத்தில் அம்புப் படுக்கையில் படுத்திருந்து, தை மாதம் பிறந்தபிறகே உயிர் துறக்கக் காத்திருந்தார்.

பூமிக்கிரகத்துக்கும், சூரியனுக்கும் இடையிலான தொடர்பில், மார்கழி மாதத்தில் ஒரு மாற்றம் நிகழ்கிறது. இதற்கு உத்தராயண புண்ணியகாலம் என்பது பெயர். மார்கழி மாதத்தில், பூமிப்பந்தின் வடபாதியில் சூரியக்கதிரின் தாக்கம் குறைவாக இருக்கிறது. இதனால் உயிர்சக்தி குறைகிறது. இந்த நேரத்தில், சுமாராக டிசம்பர் பதினான்கிலிருந்து, ஜனவரி பதினான்கு வரைக்கும் சூரியனுடைய ஈர்ப்பு நம் உடலின் கீழ்நோக்கி செயல்படுகிறது. சூரியசக்தி குறைந்துபோவதால் ஒரு விதைகூட முழுமையாக வளராது. திருமணம் நிகழ்த்துவதற்கும் கருத்தரிப்புக்கும் உகந்த காலம் இது அல்ல என்பது இந்தக் கலாச்சாரத்தின் வழக்கமாக உள்ளது.

Pongal celebration in Isha by Sadhguru

இந்த நேரத்தில் நாம் நமக்குள் ஒரு உறுதியான நிலை, ஒரு சம நிலை உருவாக்குவதற்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஆன்மீகப் பாதையில் உள்ளவர்களும், குடும்ப சூழலில் இருப்பவர்களும்கூட விரதம் அனுஷ்டிப்பது வழக்கத்தில் இருந்துவருகிறது. சூரியனுக்கு நன்றி சொல்லும் பொங்கல் விழா மார்கழி மாதம் முடிந்ததும், சூரியனுடைய பயணம் நம்மை நோக்கி வருகிறது. நாம் ஒரு வளமான காலத்திற்குச் செல்கிறோம். சூரியனுடைய சக்தி இல்லாமல் நாம் இங்கே வாழமுடியாது. பயிரும், உயிரும் தழைப்பது சூரியனால் என்ற காரணத்தால் நாம் சூரியனை எதிர்பார்க்கிறோம், வரவேற்கிறோம்.

இந்த பூமியில் உள்ள எல்லா உயிர்கள், செடி, மரம், புழு, பூச்சி, பறவை, விலங்கு, மனிதன் அனைத்தும் சூரியசக்தியில் இயங்குகின்றன. மார்கழி இறுதி நாளன்று போகித் திருநாளன்று தேவையற்ற எல்லாத் துணிகளை எரிப்பது என்பது ஒரு சம்பிரதாயம். முக்கியமாக வீட்டிலிருந்து சந்ததி உருவாக்கும் பெண்களின் ஆரோக்கியம் கருதி, சுகாதாரம் காரணமாக கடந்த ஒரு வருடமாகப் பயன்படுத்திய ஆடைகளை எரித்துவிட்டு, புதிய துவக்கமாக வேறு துணிகளை வாங்குவார்கள். நமது வாழ்க்கையில் ஏற்பட்ட சண்டை, சச்சரவுகள், மனத்தாங்கல்கள் எல்லாவற்றையும் மறந்து புதிதாகத் துவங்குவது இதன் நோக்கம். இல்லையென்றால் வாழ்க்கையே சுமையாகிவிடும்.

பழைய ஆடைகள் தவிர கோபங்கள், பொறாமை, வெறுப்பு அனைத்தையும் எரித்துவிட்டு புதிய வாழ்வின் துவக்கமாக இது பார்க்கப்படுகிறது. நம் உயிருக்கு மூலமான சக்தியாக இருக்கும் சூரியன் கதிர்த்திருப்பத்தால் மீண்டும் வந்துவிட்டதால், சூரியனுக்காக ஒரு கொண்டாட்டம் நிகழ்த்துவது சூரியபொங்கல் எனப்படுகிறது.

சூரியனுடைய சக்தியை எந்த அளவுக்கு ஒரு மனிதர் தனக்குள் இணைத்துக்கொள்கிறாரோ, அந்த அளவுக்கு உயிர் வளர்கிறது. ஆகவே முதலில் சூரியனுக்கு அர்ப்பணிப்பு செய்யவேண்டும் என்பது நமது நோக்கமாக இருக்கிறது. அதனால் அரிசி, பருப்பு இணைந்த பொங்கல் உணவை அர்ப்பணிக்கிறோம். உணவு என்பது உயிருக்கு அடிப்படையானது. ஆனால் இன்றைய காலகட்டத்தில், உணவு எல்லா இடங்களிலும் கிடைப்பதால், பெரும்பாலானவர்களும் அதை ஒரு அங்காடிப்பொருளாக என்ணுகின்றனர்.

மூன்று நாட்களுக்கு உணவு கிடைக்கவில்லையென்றால், உணவு என்பது உயிர் என்று புரிகிறது. பொங்கலை வெறும் உணவாகப் பார்க்காமல் உயிருக்கு மூலமானது என்று புரிந்திருப்பதால், அனைத்துக்கும் சக்தி அளிக்கும் சூரியனுக்கு அதை அர்ப்பணிக்கிறோம்.

மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நெல்லையில் 2வது முறையாக மத்திய குழு ஆய்வு!

இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நான்காவது முறையாக ED சம்மன்!

‘ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை குரல் கேப்டன் மில்லர்”: உதயநிதி ஸ்டாலின்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts