பொள்ளாச்சி ஊஞ்சவேலாம்பட்டி பகுதியில் உள்ள எம்பிஎஸ் கோழிப்பண்ணையில் வருமான வரித்துறையினர் விடிய விடிய சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படை, வருமான வரி, அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக தொடர்புடைய அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஹோட்டலில் வேலை பார்த்த மூன்று பேர் ரெயிலில் எடுத்துச் சென்ற ரூ.4 கோடியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்தநிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஊஞ்சவேலாம்பட்டி பகுதியில் அருள் முருகன், சரவண முருகன் ஆகியோருக்கு சொந்தமான எம்பிஎஸ் கோழிப்பண்ணை மற்றும் வெங்கடேச காலனியில் உள்ள அவர்களது அலுவலகத்தில் நேற்று இரவு முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனையின் போது ரூ.32 கோடி கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 20 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதால், கோழிப்பண்ணையை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சம்பளம் வாங்காமல் நடிக்கும் சூர்யா: ஏன் தெரியுமா?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!