அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் தனக்கு இரண்டாம் பரிசு கிடைத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், நியாயம் கேட்டு நீதிமன்றம் செல்வேன் என்றும் மாடுபிடி வீரர் அபிசித்தர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிகட்டு விழா என்றாலே சச்சரவு, பஞ்சாயத்து இல்லாமல் முடிவுக்கு வராது. ஜல்லிகட்டு விழாக்களில் காளையை அடக்குபவர்களுக்கு விழாக்குழுவினர் துண்டு, வேஷ்டி போன்றவற்றை பரிசாக வழங்குவது வழக்கம். காளையை அடக்கிய வீரர்கள் அதனை மிகப்பெரும் கௌரவமாக கொண்டாடிய காலங்கள் இருந்தது.
ஜல்லிகட்டுவிழா என்பது மாநில அரசால் போட்டியாக மாற்றப்பட்டு, அதனை அரசு விழாவாக அறிவித்து மாவட்ட நிர்வாகங்களின் கட்டுப்பாட்டில் நடத்த தொடங்கியபின் முழுக்க வணிகமயமாகிவிட்டது என்பதை மறுக்க முடியாது.
பிற விளையாட்டுக்களை போன்று முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீரர்களுக்கு லட்சக்கணக்கான மதிப்புள்ள பரிசுப்பொருட்கள் வழங்கும் நடைமுறை காரணமாக போட்டியில் பங்கேற்க இளைஞர்கள் மத்தியில் அதீத ஆர்வம் ஏற்பட்டது.
அதே போன்று ஜல்லிக்கட்டு காளைகள் தமிழ்நாட்டில் அதிகளவில் வளர்க்கப்படுவது அதிகரித்து வருகிறது. மாநில அமைச்சர்கள் முதல் சினிமா நடிகர்கள் வரை இதில் ஆர்வம் காட்டி செயல்படுத்தி வருகின்றனர். சிறந்த காளைகளுக்கான முதல் மூன்று இடங்களை பிடிப்பதில் காளை வளர்ப்பவர்களுக்கு இடையில் ஆர்வம், போட்டி அதிகரித்து வருகிறது.
பரிசு ஏற்க மறுத்த அபிசித்தர்
இந்த நிலையில் நேற்று (ஜனவரி 17) அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டியில் தொடக்கம் முதலே அதிக காளைகளை அடக்கியவர் பட்டியலில் சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அபிசித்தர் பெயர் இடம்பெற்று வந்தது. இதனை தொலைக்காட்சிகளின் நேரடி ஒளிபரப்பின் மூலம் எல்லோரும் பார்த்து வந்தனர்.
எனினும் இறுதிச்சுற்று முடிவில் முடிவில் மதுரை மாவட்டம் கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்தி, 18 காளைகளை அடக்கி முதல் பரிசை வென்றதாக அறிவிக்கப்பட்டார். 17 காளைகளை அடக்கி அபிசித்தர் இரண்டாம் பரிசு வென்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதனை ஏற்க மறுத்த அபிசித்தர், ’இது பாரபட்சமான முடிவு, மாவட்ட அமைச்சர் மூர்த்திதான் இதற்கு காரணம்’ என குற்றம் சுமத்தியுள்ளார். மேலும், தனக்கான மோட்டார் சைக்கிள் பரிசையும் வாங்க மறுத்து வெளியேறினார்.
நீதிமன்றம் செல்வேன்!
இதுதொடர்பாக அலங்காநல்லூரில் செய்தியாளர்களிடம் அபிசித்தர் கூறியதாவது, “கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 30 மாடுகள் பிடித்தேன். ஆனால் 26 மாடுகள் பிடித்ததாகக் கூறி முதல் பரிசு வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் அரசியல் செய்து எனக்கு முதல் பரிசை கிடைக்க விடாமல் இந்த அரசு செய்து விட்டது. இதற்கு காரணம் அமைச்சர்தான்.
இம்முறை முதல் பரிசு பெற்ற கார்த்தி, கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் பரிந்துரையின் பேரில் வந்து மாடு பிடித்தார்.
நான் 2 சுற்றில் (பேட்ஜ்) 11 மாடுகள் அடக்கினேன். அவர் 3 சுற்றில்தான் 11 மாடுகளைப் பிடித்தார். நானும், கார்த்தியும் 17 மாடுகள் பிடித்தோம். இதை விழாக் குழுவினரும் கண்டறியவில்லை. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை விழா கமிட்டி நடத்தவில்லை. முழுக்க முழுக்க அரசியல் வந்துவிட்டது. நான் நியாயம் கேட்டு நீதிமன்றத்துக்குச் செல்வேன். வீடியோவைப் பார்த்து, இதே மேடையில் என்னை முதல் பரிசு பெற்றதாக அறிவிக்க வேண்டும்” இவ்வாறு அபிசித்தர். கூறினார்.
குற்றச்சாட்டை ஏற்க இயலாது!
இதுகுறித்து அமைச்சர் பி. மூர்த்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘‘ஜல்லிக்கட்டு என்பது பொதுவானது. எவ்விதப் பாகுபாடும் இன்றியே போட்டி நடத்தப்பட்டது. கடைசி சுற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்துபோட்டியாளர்கள் அனைவருக்குமே வாய்ப்பளித்தோம்.
விழாக் குழுவினரும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து தகுதியின் அடிப்படையில் தான் பரிசு வழங்கப்பட்டது. அதிகாரிகளும் முறையாகச் செயல்பட்டு முடிவை அறிவித்துள்ளனர். குளறுபடி நடக்க வாய்ப்பே இல்லை. 2-வது பரிசு பெற்றவரின் குற்றச்சாட்டை ஏற்க இயலாது’’ என்று அவர் தெரிவித்தார்.
அலங்காநல்லூர் ஜல்லிகட்டில் இது போன்ற சர்ச்சை இதுவரை ஏற்பட்டது இல்லை. விழா நடத்துவதில் மாவட்ட நிர்வாகம், ஆளும் கட்சியினரின் ஆதிக்கம் இருக்கும். ஆனால் பரிசுக்குரியவர்களை பாரபட்சமின்றி தேர்வு செய்து வந்த ஜல்லிகட்டு விழாக்குழு முதன்முறையாக விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
அபிசித்தர் கூறியபடி நீதிமன்றம் செல்வரா அல்லது ஆட்சியாளர்களின் அழுத்தத்திற்கு அடிபணிந்து போவாரா என்பதை ஜல்லிகட்டு வீரர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
ரிப்பீட் சூப்பர் ஓவரில் இந்தியா ’த்ரில்’ வெற்றி பெற்றது எப்படி? : ரோகித் விளக்கம்!
பிரித்விராஜ் உடன் மலையாள திரையுலகில் கால் பதிக்கும் யோகி பாபு