இந்தியா முழுவதும் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதனையடுத்து இஸ்லாமியர்களின் முக்கியமான 5 கடமைகளில் ஒன்றாக ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட ஒரு மாதமாக ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அரபு நாடுகளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது. தொடர்ந்து நேற்று மாலை தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பிறை தென்பட்டதையடுத்து இன்று (ஏப்ரல் 22) ரமலான் பண்டிகையைக் கொண்டாடலாம் என்று தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து இன்று அதிகாலை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ஏராளமான இஸ்லாமியர்கள் தொழுகையில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பிரமர் மோடி, “ஈத்-உல்-பித்ர் நல்வாழ்த்துக்கள். நமது சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் கருணை உணர்வு மேலும் வளரட்டும். அனைவரின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி, “அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள். இந்த புனிதமான பண்டிகை அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பை கொண்டு வரட்டும்” என்று வாழ்த்தியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை இன்பமுடன் கொண்டாடும், அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “புனித ரம்ஜான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இஸ்லாம் போதிக்கும் கருணை, ஈகை, அன்பு, பொறுமை, இறைச்சிந்தனை ஆகிய நற்குணங்கள் பெருகி அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டிக் கொள்கிறேன்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
அமைச்சர்கள் பலரும் அவர்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
மோனிஷா
அட்சய திருதியை நாளில் தங்கம் விலை அதிரடி வீழ்ச்சி!
கர்நாடக தேர்தல்: ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்களுக்கு எதிராக எடப்பாடி கடிதம்!