செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பகுதியிலும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியிலும் விஷ சாராயம் குடித்து 22 பேர் மரணம் அடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் மே 21 ஆம் தேதி தஞ்சாவூர் கீழ்வாசல் டாஸ்மாக் கடை அருகில் உள்ள லைசென்ஸ் பாரில் இல்லீகலாக பிராந்தி வாங்கி குடித்த இருவர் மரணம் அடைந்தது தமிழகத்தை மீண்டும் உலுக்கியுள்ளது.
தஞ்சாவூர் கீழ் வாசல் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி (67) விவேக் (36) இருவரும் கீழ் வாசல் மீன் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் காலை 11.15 மணிக்கு கீழ் வாசல் மீன் மார்க்கெட்டிலிருந்து 100 அடி தூரத்தில் உள்ள டாஸ்மாக் கடை பாருக்கு சென்று ஒரு குவாட்டர் பிராந்தி, ஒரு வாட்டர் பாட்டில் ஒரு கிளாஸ் வாங்கிவிட்டு வெளியில் வந்து குடித்தவர்கள் அரை மணி நேரத்தில் வாய் மற்றும் மூக்கு வழியாக நுரைகள் வந்தபடி மயங்கி விழுந்துள்ளனர்.
அங்கிருந்துவர்கள் இருவரையும் மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற வழியிலே குப்புசாமி இறந்துவிட்டார், ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு சிகிச்சை பலனின்றி விவேக்கும் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் எஸ் பி ஆசீஸ் இருவரும் முதல் நடவடிக்கையாக டாஸ்மாக் கடைக்கும் பாருக்கும் சீல் வைத்தனர்.
எஸ் பி ஆசீஸ், டிஎஸ்பி ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் என தனித்தனி குழுக்களாகப் பிரிந்து ரகசிய விசாரணையிலும், வெளிப்படையான விசாரணையிலும் ஈடுபட்டனர்.
பாரிலிருந்த இரண்டு சிசிடிவி கேமராவை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது பார் உள்ளே இருந்த கேமரா வேலை செய்யாததும், இல்லீகலாக பீர் மற்றும் பிராந்தி விற்பனை செய்வதால் வெளியில் இருந்த கேமரா உள்ளே வருவோர் போவோர் தெரியாத அளவுக்கு திருப்பி வைக்கப்பட்டு இருந்ததும் கண்டறியப்பட்டது.
பாரில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் சரக்கும், டாஸ்மாக் சரக்கும் இருந்துள்ளதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து பார் உரிமையாளரும் காங்கிரஸ் மாவட்டத் துணை தலைவருமான பழனிவேலை காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் இறந்துபோன குப்புசாமி மற்றும் விவேக் உறவினர்களிடம் முன் பகை அல்லது குடும்ப பிரச்சனை ஏதாவது இருக்கிறதா எனவும் விசாரித்துள்ளனர்.
விவேக் மற்றும் அவரது மனைவி குடும்ப பிரச்சினையால் பிரிந்து இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. அந்த கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்
பாரில் சட்டவிரோதமாக சரக்கு விற்பனை செய்த ராதாகிருஷ்ணன் மற்றும் கேஷியராக இருந்த முஸ்லிம் மதத்தை சேர்ந்த இளைஞர் இருவரையும் காவல் கண்காணிப்பு வளையத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராதாகிருஷ்ணன் கொடுத்த வாக்குமூலத்தில், “வழக்கமாக காலை ஆறு மணியிலிருந்து பாருக்கு குடிக்க வருவார்கள். அதனால் இரவே டாஸ்மாக் கடையிலிருந்து சரக்கு வாங்கி வைத்துக்கொள்வோம். ஒரு பெக் 60 மில்லி குவாட்டர் காசுக்கு விற்பனை செய்வோம்.
அப்படித்தான் காலை சுமார் 10.45 மணிக்கு இருவர் வந்து இரண்டு கட்டிங் (90 மில்லி ஒரு கட்டிங்) வாங்கிவிட்டு போனார்கள், மீதியிருந்த இரண்டு கட்டிங் (ஒரு குவாட்டர்) இறந்து போனவர்கள் வாங்கிட்டு சென்றுள்ளார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
ஒரு ஆஃப் பிளாக் பேரல் பிராந்தி பாட்டிலை திறந்து மூவருக்கு விற்பனை செய்துள்ளனர். நான்கு பேர் குடித்துள்ளனர்.
குப்புசாமி, விவேக் இருவரும் ஒரு வாட்டர் பாட்டில், ஒரு டிஷ்போஸ் கிளாஸ், ஒரு சுண்டல் பாக்கெட் வாங்கிபோய் ஐந்து நிமிடங்களில் குடித்துவிட்டு மீன் மார்க்கெட்டுக்கு போயுள்ளனர். வியாபாரத்தைப் பார்த்த போதுதான் நிலைத் தடுமாறி மயங்கி விழுந்துள்ளனர்.
ஒரு ஆஃப் மூன்று பேர் வாங்கி நான்கு பேர் குடித்துள்ளனர் ஆனால் இறந்தது இரண்டுபேர் மட்டுமே.
அதனால் சரக்கு விற்பனை செய்த ராதாகிருஷ்ணனை நெருக்கி வருகிறது போலீஸ். கேஷியர் இஸ்லாமிய இளைஞனை விசாரித்ததில் எனக்கு எதுவும் தெரியாது. காசு வாங்கி கல்லாவில் போடும் வேலைதான் என்னோட வேலை என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் அருந்திய மதுபான மாதிரியை தடயவியல் சோதனைக்கு அனுப்பியதில் அதில் சயனைடு கலந்தது தெரியவந்துள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.
சயனைடு அதிகளவில் நகைத் தொழிலுக்கு பயன்படுத்துவார்கள். இதனால் நகை வியாபாரிகள் மற்றும் நகை மெருகு ஏத்தர பத்தர்களையும் கணக்கெடுத்து கண்காணித்து வருகின்றனர் ஸ்பெஷல் டீம் போலிஸ்.
பார் விற்பனையாளர் ராதாகிருஷ்ணன் வேறு யாருக்காவது குறி வைத்தாரா அல்லது விவேக்குக்கு குறிவைத்து சயனைடு கலந்தாரா, விவேக் தற்கொலைக்கு முடிவெடுத்து கலந்திருப்பாரா? அதாவது கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் தீவிரமான விசாரணை நடத்தி வருகின்றனர் தஞ்சை போலீஸ்.
வணங்காமுடி
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: நெல்லிக்காய் சட்னி
Comments are closed.