போதைப்பொருள் விவகாரத்தில் போலீசார் ரெய்டு : மாணவர் தற்கொலை!
போதைப்பொருள் விவகாரத்தில் விசாரணைக்கு உள்ளான தனியார் கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்டிருப்பது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையை அடுத்த பொத்தேரியில் இயங்கி வரும் தனியார் கல்லூரி மாணவர்கள் அதிகளவு தங்கியிருந்த அடோப் வேலி அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பயன்பாடு இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஒரே சமயத்தில் தாம்பரம் போலீசார் சுமார் 1000 பேர் அடோப் வேலியில் மேற்கொண்ட சோதனையில், அரை கிலோ கஞ்சா, கஞ்சா சாக்லேட், கஞ்சா ஆயில், ஸ்மோக்கிங் பார்ட் 1, ஹூக்கா மெஷின் 7, ஹூக்கா பவுடர் 6 கிலோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் மாணவர்களின் நலன் கருதி அவர்களை சொந்த ஜாமீனில் செங்கல்பட்டு நீதிமன்றம் விடுவித்தது.
இந்நிலையில், தனியார் கல்லூரியில் பி.டெக் நான்காம் ஆண்டு படித்து வந்த மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அடோப் வேலி குடியிருப்பில் வசித்து வந்த ஸ்ரீனிவாச நிக்கில் என்ற அந்த மாணவர் ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தைச் சேர்ந்தவர். இவரிடம் போதைப்பொருள் விவகாரத்தில் போலீசார் விசாரித்துள்ளனர்.
இந்தநிலையில், கல்லூரி நிர்வாகம் மாணவர் நிக்கிலை அழைத்து விசாரித்ததாகவும், அவரது பெற்றோரை வர சொன்னதாகவும், அந்த அடுக்குமாடி உரிமையாளர், நிக்கிலை வீட்டை காலி செய்யுமாறு கூறியதாகவும் தகவல்கள் வருகின்றன.
இதுதொடர்பாக தனது பெற்றோரிடம் பேசிய நிக்கில் நேற்று இரவு தான் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் 4ஆவது மாடியில் இருந்து குதித்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று (செப்டம்பர் 5) காலை உயிரிழந்துள்ளார்.
நிக்கில் தற்கொலை செய்து கொண்டிருப்பது மாணவர்கள், பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் : பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!
Paralympics 2024: மீண்டும் சாதித்த மாரியப்பன் தங்கவேலு… இந்தியா புதிய வரலாறு!