வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமான வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் ஜோதி ஊர்வலத்திற்கு போலீசார் பல்வேறு திடீர் கட்டுபாடுகளை விதித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்குள்ளே வீரசக்கதேவி என்ற ஜக்கம்மா கோயில் உள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மன் எந்த செயலை முன்னெடுத்தாலும் தனது குலதெய்வமான ஜக்கம்மாளின் அருளோடு தான் முன்னெடுப்பார்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கடைசி வெள்ளிக்கிழமைகளில் ஜக்கம்மா கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இந்த வருடம் பாஞ்சாலங்குறிச்சியில் இன்று மற்றும் நாளை என 2 நாட்களுக்கு வீரச்சக்க தேவி ஆலய திருவிழா நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது..
மேலும் இத்திருவிழாவின் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் இன்று மாலை 6 மணி முதல் 14ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் திருச்செந்தூர், கயத்தார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் ஜோதி ஊர்வலம் வருவது வழக்கம். அப்படி வரும்போது இருசக்கர வாகனங்களும் அதிகளவில் வருவது வழக்கம். ஆனால் ஜோதி ஊர்வலத்தைத் தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் வர போலீசார் அதற்கு அனுமதி மறுத்துள்ளனர்.
இதனையடுத்து எதிர்ப்பு தெரிவித்த கோவில் நிர்வாகத்தினர் அங்கு நடைபெற்று வந்த கணபதி ஹோமத்தையும் நிறுத்தியுள்ளனர்.
இதனால் போலீசார் மற்றும் இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது ஜோதி ஊர்வலத்தை தொடர்ந்து இருசக்கரவாகனத்தில் பக்தர்கள் வருவதற்கு பதிலாக கார்களில் பக்தர்கள் ஜோதி ஊர்வலத்திற்கு வருமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
வழக்கமாக ஜோதி ஊர்வலத்திற்கு இளைஞர்கள் ஆரவாரத்துடன் வரும் நிலையில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா