மெரினாவில் போராட்டம்… போலீசார் குவிப்பு!

தமிழகம்

மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதிகேட்டு சென்னை மெரினா கடற்கரையில் இன்று (ஜூலை 19)போராட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியானதை தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியமூரில் செயல்பட்டு வரும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி படித்து வந்தார். கடந்த 13ஆம் தேதி மாணவி பள்ளியில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் சந்தேகம் எழுப்பினர். மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு கடந்த 17ஆம் தேதி கனியமூர் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பள்ளி மற்றும் வாகனங்களுக்கு கலவரக்காரர்கள் தீ வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்ட 23 சிறார்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று சென்னை மெரினா கடற்கரையில் மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதிகேட்டு 2500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கூட உள்ளதாக சமூகவலைதளங்களில் நேற்று இரவு தகவல் வெளியானது. இதனையடுத்து நேப்பியார் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை சென்னை மெரினா கடற்கரையில் இன்று சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் போராட்டம் தொடர்பாக சமூகவலை தளங்களில் தகவல் பரப்பிய 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேப்பாக்கம் உள்ளிட்ட கடற்கரை ஒட்டிய ரயில் நிலையங்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

2017ம் ஆண்டு மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து அங்கு போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு அங்கு போராட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியானதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *