வேலியே பயிரை மேய்ந்தது போல என்பதெல்லாம் பழமொழி, போலீசே கொள்ளை அடித்தது போல என்பதுதான் புது மொழியாகிவிட்டது.
சில நாட்களுக்கு முன் சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தின் ஒரு பகுதி ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் சிக்கியது.
இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் வேலூரில் நடந்த ஒரு மெகா கொள்ளையில் போலீசுக்கும் தொடர்பு இருப்பதாகப் பரபரப்பு புகார்கள் எழுகின்றன.
வேலூர் மாவட்டம் சேர்வை முனுசாமி நகரில் சகுந்தலா அம்மன் தெருவில் டாக்டர் மணிக்கண்ணன் வசித்து வருகிறார்.
வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைப் பிரிவில் இணைப் பேராசிரியராக உள்ளார். அவரது மனைவி தனியார் க்ளினிக் நடத்தி வருகிறார்.
கணவன் மனைவி இருவரும் கடந்த மாதம் கேரள மாநிலத்தில் நடைபெற்ற மருத்துவ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றிருந்தனர்.
இந்நிலையில், கடந்த ஜூலை 24ஆம் தேதி காலையில் இவர்களது வீட்டுப் பூட்டை உடைத்து வீட்டிலிருந்த பொருட்களையும் பணத்தையும் கொள்ளை கும்பல் ஒன்று திருடிக் கொண்டு தப்பிவிட்டது.
வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது குறித்து கேரளாவிலிருந்த தம்பதியினருக்குத் தகவல் கிடைத்தது. இதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்த தம்பதியினர் பதறிப்போய் வேலூர் விரைந்தனர்.
வீட்டிலிருந்த பொருட்கள் சிதறிக் கிடந்ததைப் பார்த்து சோகத்தில் மூழ்கினர்.
இவர்கள் புகார் கொடுப்பதற்கு முன்னதாகவே தகவலறிந்து போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
கை ரேகை நிபுணர்கள் வந்து தடயங்களைச் சேகரித்தனர். மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது.
இதையடுத்து டாக்டர் தம்பதிகள் முறைப்படி புகார் கொடுத்தனர். அந்த புகாரில் ரூ.15 லட்சம் ரொக்கம், நான்கு சவரனில் டைமன் பொருத்திய நெக்லஸ் ஒன்று, மூன்று சவரன் தங்க நெக்லஸ் ஒன்று ,நான்கு சவரனில் பவளம் பொருத்திய நெக்லஸ் ஒன்று, இரண்டு சவரனில் டாலர் செயின் ஒன்று, 12 கிராமில் மூன்று ஜோடி கம்மல்கள், ஆறு கிராம் மோதிரம் ஒன்று, மூன்று சவரனில் ஒரு ஜோடி ஜிமிக்கி கம்மல், நான்கரை சவரன் ஸ்டாப் பொருத்திய வாட்ச் ஒன்று என மொத்தம் 22 சவரன் 6 கிராம் தங்க நகைகளும், 15 கிராம் வெள்ளி செயின், ஆகியவை கொள்ளை போயுள்ளதாகத் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணையில் கொள்ளை கும்பல் வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகள் பதிவான ஹார்ட் டிஸ்க்கையும் உடைத்து எடுத்துச் சென்றது தெரியவந்தது. கொள்ளை போன நகைகளைக் கண்டுபிடிக்க டாக்டரும் அவரது மனைவியும் அவர்களுக்குத் தெரிந்தவர்களிடம் உதவி கேட்டனர்.
மேலும், “திருடுபோன பொருட்கள் எல்லாம் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்தது, க்ளினிக் கட்டுவதற்கு 15 லட்சம் பணம் வைத்திருந்தோம்” என்று எஸ்பியிடம் சொல்லி விரைவில் கண்டுபிடிக்குமாறு வலியுறுத்தினர்.
இந்நிலையில், வேலூர் எஸ்பி ராஜேஷ் கண்ணன், டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையில் சிறப்பு டீமை அமைத்துத் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டார். இந்த டீம் வேலூர் முழுவதுமுள்ள சிசிடிவி கேமராவில் பதிவானதை அலசி ஆராய்ந்து விசாரணை நடத்தினர்.
இதில், சம்பவம் நடந்த நாளான ஜூலை 21ஆம் தேதி ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் டாக்டர் வீட்டுப்பக்கம் நோட்டமிட சிலர் வந்துள்ளனர். இந்த கும்பல் மறுநாள் காலையில் மகேந்திரா லோக்கன் காரில் டாக்டர் வீட்டில் கொள்ளையடித்துவிட்டுத் தப்பித்துள்ளது.குறிப்பாக இந்த காரின் பதிவெண்ணாக டூ வீலர் பதிவு எண் பொருத்திக்கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.
மேலும் அந்த காரில் தப்பிச் சென்றது தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மொய்தீன், ஷாஜகான் ஆகிய சகோதரர்கள் என்று போலீசார் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து எஸ்.பி ராஜேஷ் கண்ணனுக்குத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. கொள்ளை போய் சுமார் 28 நாட்களுக்குப் பிறகு இருவரும் வேலூருக்குப் பிடித்து வரப்பட்டனர்.

இதுகுறித்து வேலூர் காவல்துறை தரப்பில் விசாரித்த போது எஸ்பியே கொள்ளையர்களுக்காகக் கரிசனம் காட்டியது தெரியவந்தது.
“வேலூர் பள்ளி கொண்டா காவல் நிலையத்துக்குக் கொள்ளையர்கள் மொய்தீன் மற்றும் ஷாஜகான் இருவரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மாலை நேரத்தில் அழைத்து வரப்பட்டனர்.
டாக்டர் மணிக்கண்ணனும் வரவழைக்கப்பட்டார். அப்போது, இன்ஸ்பெக்டர் அறைக்குள் எஸ்பி ராஜேஷ்கண்ணன் வந்து அமர்ந்தார். டிஎஸ்பி திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் ஷியாமளா இருவரும் உடன் இருந்தனர். கொள்ளையர்கள் எஸ்பி முன்பு நிறுத்தப்பட்டனர்.
அவர்கள் சுவரில் சாய்ந்தபடி நின்று அதிகாரிகளின் கேள்விக்குப் பதிலளித்தனர்.
டாக்டர் மணிக்கண்ணணை அழைத்து இடது பக்கம் நிற்கவைத்து, கொள்ளையர்களிடம் டாக்டரை அறிமுகம் செய்து வைத்தார் எஸ்பி. ‘நீங்கள் கொள்ளையடித்த வீடு இந்த டாக்டர் வீடுதான்… அன்று என்னென்ன கொள்ளையடித்தீர்கள் நீங்களே சொல்லுங்கப்பா’ என்று எஸ்பி கேட்க, “டாக்டர் வீட்டை நோட்டமிட்டோம்.
சம்பவத்தன்று சுவர் ஏறி உள்ளே குதித்தோம். நாய் செயின் ஒன்று கிடந்ததால் நாய் இருக்குமோ என்று அஞ்சி உதவிக்கு நண்பனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றோம். படுக்கை அறையில் கட்டிலிலிருந்த ரூ.10.8 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டோம்.

அங்கிருந்த நகைகள் கவரிங்காக இருந்ததால் அப்படியே வைத்துவிட்டோம். ஒரே ஜிமிக்கி கம்மல் மட்டும் எடுத்துச் சென்றோம்” என்று மொய்தீன் கூறினார்.
அவரிடம் டாக்டர் குறுக்குக் கேள்வி எழுப்பினார். ‘ஏம்பா கட்டில்ல இருந்த பணத்தை சொல்ற, பீரோவில் எடுத்ததைச் சொல்லவில்லையே?’ என்றார். அதற்கு மொய்தீன், “எனக்கு தெரியாதுங்க தம்பிக்குத்தான் தெரியும்” என்றார்.
உடனே தம்பி ஷாஜகானை அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. அவர், “10 லட்சத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் குறைந்தது. நாங்கள் எடுத்துச் சென்ற நகைகளை உருக்கிப் பார்த்தோம். அனைத்தும் கவரிங் என்று தெரிந்தது” என கூறினார்.
இதையடுத்து டாக்டர் எஸ்பியை பார்த்து, “நகைகளை எடுத்ததைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. வீட்டில் சில கவரிங் நகைகள் இருந்தது. அதை நான் சொல்லவில்லை. வெள்ளித் தட்டு, டைமன் பொருத்திய நகைகள் எதுவும் இவர்கள் சொல்லவில்லை.
முதலில் விசாரிக்கப்பட்டவர், 10.8 லட்சம் என்கிறார். கவரிங் நகைகளை வீட்டிலேயே போட்டுவிட்டுச் சென்றதாக சொல்கிறார். இரண்டாவது நபர், 10 லட்சத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் குறைகிறது என்கிறார். என்ன சார் இது ஒன்றும் புரியவில்லையே” என புலம்பினார்.

அப்போது எஸ்பி ராஜேஷ்கண்ணன், “டாக்டர், அவர்கள் அல்லா மீது சத்தியம் செய்கிறார்கள். அல்லாமீது சத்தியம் செய்தால் பொய் சொல்லமாட்டார்கள். அவர்களை நாங்கள் அடித்தும் கேட்கமுடியாது. சிபிஐ விசாரித்தாலும் இதைத்தான் சொல்வார்கள். எடுத்து போன பணத்தையும் மருத்துவச் செலவு செய்துவிட்டார்களாம்.
அதை நினைக்கும் போது பாவமாகத்தான் உள்ளது. வேண்டும் என்றால் உங்களுக்காக மூன்றரை லட்சம் ரூபாய் கேட்டு பார்க்கிறோம். நகைகள் ஏதும் கிடைக்காது. அதனால்தான் உங்கள் எதிரிலேயே விசாரித்தேன்” என்று சொன்னார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த டாக்டர், “கடவுள் மீது சத்தியமாகச் சொல்கிறேன் சார், 22 சவரன் மற்றும் 6கிராம் கொள்ளைப் போனது உண்மை. சிசிடிவி புட்டேஜ் எங்கே என்று கேளுங்கள்” என கூறினார்.
இதுகுறித்து கொள்ளையர்களிடம் கேட்ட போது, “அதை காரில் போகும்போதே கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து போட்டுவிட்டோம்” என்றனர். இதுதான் ஸ்டேஷனில் நடந்தது” என்றார்கள்.
டிஎஸ்பி திருநாவுக்கரசுவிடம் இந்த கொள்ளை சம்பவம் குறித்தும் ஸ்டேஷனில் நடந்தவை பற்றியும் கேட்டோம். அவர், “மொய்தீனும், ஷாஜகானும் உடன்பிறந்த சகோதரர்கள். இவர்கள் மீது பல மாவட்டங்களில் வீட்டின் பூட்டை உடைத்துக் கொள்ளையடித்த வழக்குகள் உள்ளன. இருவரது தந்தையும் பெரிய கொள்ளை வழக்குகளில் சிக்கியவர்” என்றார்.
அப்படிப்பட்ட கொள்ளையர்கள் மீது எஸ்பி ஏன் இப்படி கரிசனம் காட்டுகிறார் என்று மேலும் சில அதிகாரிகளிடம் பேசினோம்.
“எஸ்பி ராஜேஷ்கண்ணன் ஸ்ரீபெரும்புதூர் ஏஎஸ்பியாக இருந்தபோது பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய படப்பை குணாவிடம் நெருக்கமாக இருந்ததாக அப்போதே காஞ்சிபுரம் மாவட்டம் காவல்துறையினர் மத்தியில் புகைச்சல் ஏற்பட்டது. டாக்டர் வீட்டில் கொள்ளையடித்தவர்களை எஸ்பி சரியாக விசாரிக்கவே விடவில்லை.
டாக்டர் மணிக்கண்ணன் வீட்டில் கொள்ளையடித்ததுபோல் இன்னொரு டாக்டர் வீட்டிலும் அமெரிக்க டாலர்களைக் கொள்ளையடித்துவிட்டுப் போய்விட்டார்கள். அனைத்தும் சேர்த்து கொஞ்சமாகத்தான் ரெக்கவரி செய்யப்பட்டது. விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால் இன்னும் பல வழக்குகளில் ரெக்கவரி செய்யலாம். டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த அனைத்து பொருட்களையும் ரெக்கவரி செய்யலாம்” என்கிறார் வேலூர் மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர்.
காவல்துறை உங்கள் நண்பன் என்பதெல்லாம் சரிதான். அந்த ‘உங்கள்’ என்பது யார்? மக்களின் நண்பர்களா? கொள்ளையர்களின் நண்பர்களா?
–வணங்காமுடி
வங்கி கொள்ளை : இன்ஸ்பெக்டருக்காக சத்தியம் கேட்ட கொள்ளையன்!