டூவிலர் திருட்டுக்கு எஃப்.ஐ.ஆர்.  போடலையா? இனி அப்படி கிடையாது!

தமிழகம்

‘உங்கள் ஆட்சியை விட எங்கள் ஆட்சியில் குற்றங்கள் குறைவு…’  என ஆளுங்கட்சியும்.  ‘எங்கள் ஆட்சியை விட உங்கள் ஆட்சியில் குற்றங்கள் அதிகம்’ என எதிர்க்கட்சியும் அறிக்கைப் போர் நடத்துவதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

அதிலும் குறிப்பாக சட்டம் ஒழுங்கு பற்றிய விவாதங்கள் வரும்போதெல்லாம் இந்த புள்ளி விவரங்கள்தான் எதிர்க்கட்சிகளுக்கு ஆயுதம், ஆளுங்கட்சிக்கு கேடயம்.

இதனால், ஒவ்வொரு அரசிலும் இருக்கும் காவல்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு எண்ணிக்கையை குறைத்துக் காட்டவே விரும்புவர்.  உயரதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என கீழ் நிலை அதிகாரிகளும், ஆட்சியாளர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று காவல்துறை உயரதிகாரிகளுமே, இந்த  வழக்குப் பதிவு விஷயத்தில் கணக்கு போட்டுத்தான் பணியாற்றுகிறார்கள்.

இந்த நிலையில்தான்…  சமீபத்தில்  டிஜிபி சங்கர் ஜிவால்,  சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரிடமிருந்து அனைத்து ஐ.ஜி.க்களுக்கும்,  மாநகர ஆணையர்களுக்கும்  வாய்மொழி உத்தரவு ஒன்று பறந்துள்ளது.

அதாவது,  “குற்றப் பதிவுகளை குறைத்துக் காட்ட வேண்டும் என்ற நோக்கோடு  மக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் தவிர்க்காதீர்கள்.   புகார்கள் உண்மைத் தன்மையுடயதாக இருந்தால் தவறாமல் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுங்கள்” என்பதுதான் அந்த வாய்மொழி உத்தரவு.

இந்த உத்தரவு அனைத்து மாவட்டத்திலும் போலீஸ் அதிகாரிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து   போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம்.

“குற்றப் பதிவு எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதற்காக மக்களின் புகார்கள் மீது எஃப்.ஐ.ஆர் போடப்படாத ஒரு நிலைமை இருந்தது வருவது உண்மைதான். உதாரணத்துக்கு ஒரு காவல்நிலைய லிமிட்டில்  ஒரு மாதத்தில் 20 திருட்டு சம்பவங்கள் நடக்கிறது என்றால், அதில் 5 திருட்டுச் சம்பவங்களுக்குதான் வழக்குப் பதிவு செய்வார்கள். மேலும் பொதுமக்களிடம் இருந்து அதிகமாக பெறப்படும் டூவீலர் திருட்டு புகார்களை போலீஸார் கண்டுகொள்வதே இல்லை.

பெறப்படும் அனைத்துப் புகார்கள் மீதும் வழக்குப் பதிவு செய்தால்… ரிவியூ மீட்டிங்கில், ‘உங்கள் ஸ்டேஷனில் என்ன இவ்வளவு குற்றங்கள் நடந்திருக்கின்றன? இது அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திவிடுமே?’ என்று எஸ்.பி. கடிந்துகொள்வார்.  ஏனென்றால் மாநில அளவிலான ரிவ்யூ மீட்டிங்கில் டிஜிபி தன்னை கடிந்துகொள்வாரே என்ற முன்னெச்சரிக்கைதான்.  அதனால்,  பெறப்படும் புகார்களில் ஒரு பகுதியை மட்டுமே வழக்குப் பதிவு செய்வது காவல்துறையில் தொடர் கதை.

இந்த நிலையில்தான் தமிழகம் முழுதும் டூவீலர்கள் திருட்டு தொடர்பாக கொடுக்கப்படும் புகார்களில் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்ற தகவல் உளவுத்துறை மூலம் மேலிடத்துக்குச் சென்றிருக்கிறது.  டூவீலர்கள் திருட்டு போய்விட்டதாக புகார் கொடுப்பவர்களில் பெரும்பாலானோர் மிடில்கிளாஸ், மற்றும் அடித்தட்டு வர்க்கத்தினர்தான்.  அவர்களுக்கு எஃப்.ஐ.ஆர்.  கொடுக்கப்பட்டால் அதை ஆதாரமாக  வைத்து அவர்களால்  இன்ஸ்யூரன்ஸ் க்ளைம் செய்துகொள்ள முடியும். ஆனால்  எஃப்.ஐ.ஆர். இல்லாமல் அவர்களால் ஏதும் செய்யமுடியாமல் கோபத்தோடு புலம்பி வருகிறார்கள். இது  நீறுபூத்த நெருப்பாக பெரும் மக்கள் பிரச்சினையாக கனன்று கொண்டிருக்கிறது என்ற தகவல் உளவுத்துறை மூலம்  மேலிடத்துக்கு சென்றது.

இதை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று, அவரது ஆலோசனையைப் பெற்ற பின்னர்தான்…  டூவீலர் திருட்டு உள்ளிட்ட  புகார்களுக்கு கண்டிப்பாக  எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஏற்கனவே பெறப்பட்ட புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் போலீஸில் தீவிரம் அடைந்துள்ளன. பல மாவட்டங்களில் புகார் கொடுத்தவர்களின் வீடுகளுக்கே போலீசார் சென்று மீண்டும் அவர்களிடம் புதிய புகார் வாங்கி எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து வருகிறார்கள். இதில் அதிகபட்சமாக  ஐ.ஜி.அஸ்ரா கார்க்கின் வடக்கு மண்டலத்தில்  கடந்த 45 நாட்களில் மட்டும்  2 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அரசியல் காரணங்களுக்காகவே போலீஸார் இதுவரை எஃப்.ஐ.ஆர். களின் எண்ணிக்கை பற்றிய தயக்கத்தில் இருந்தனர். ஆனால் இப்போது அந்த தடை நீக்கப்பட்டதால் பொது மக்களின் உண்மையான புகார்களுக்கு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உடனுக்குடன்  தீர்வு காணும்  நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன” என்கிறார்கள்.

இது தொடர வேண்டும். மக்கள் துயர் தீர வேண்டும்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

-வணங்காமுடி

‘அம்மா’ அமைப்பின் தலைவரா? தலை தெறிக்க ஓடும் மோகன்லால்

தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி : யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *