அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : பார்வையாளர்கள் மீது போலீசார் தடியடி!

Published On:

| By christopher

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜனவரி 17) விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வாடிவாசல் அருகே பார்வையாளர்கள் கேலரியில் முண்டியடித்து ஏற முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தினர்.

பொங்கல் விழாவையொட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வெகு விமரிசையாக நடந்து முடிந்தன. இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.

காலை 7. 30 மணிக்குத் தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பொதுமக்கள் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்கு வசதியாக வாடிவாசல் அருகே பார்வையாளர் கேலரி அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை பார்வையாளர்கள் மாற்றப்பட்டு இந்த கேலரியில் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திடீரென கேலரியில் ஏறுவதற்காக காத்திருந்த பொதுமக்கள், வெளிமாநில மற்றும் சுற்றுலா வந்த பார்வையாளர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கேலரியில் முண்டியடித்துக் கொண்டு ஏற முயற்சித்த வயதானவர்களும், குழந்தைகளும் தடுமாறி கீழே விழுந்தனர்.

இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கேலரியில் ஏற முயன்றவர்கள் மீது லேசான தடியடி நடத்தினர். இதில் சிறுவர்கள் உட்பட ஏராளமானோர் காயமடைந்த நிலையில் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கிறிஸ்டோபர் ஜெமா

நியூசிலாந்து ஒருநாள் தொடர் : இந்திய அணியில் முக்கிய வீரர் விலகல்!

“குடும்பப்பாசம் முட்டிமோதி வீதிக்கு வரும்” – அழகிரி சந்திப்பு குறித்து ஜெயக்குமார் விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share