திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த நவம்பர் 29-ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூர் அருகே உள்ள சேமலைகவுண்டம்பாளையம் கிராமத்தில் பண்ணை வீட்டில் வசித்து வந்த தெய்வசிகாமணி,அலமாத்தாள் மற்றும் அவர்களது மகன் செந்தில் குமார் ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டனர். அவர்கள் வீட்டில் இருந்து 8 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இந்த படுகொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்த இடத்தில் மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் லட்சுமி, டிஎஸ்பி சுரேஷ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது,
“பல்லடம் டிஎஸ்பி சுரேஷ், பெருந்துறை டிஎஸ்பி கோகுல கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பவம் நடைபெற்ற வீட்டின் அருகில் உள்ள தோட்டத்திற்கு அடிக்கடி சென்று வந்த நபர் ஒருவர் உள்பட மொத்தம் நான்கு பேரை பிடித்து டிஎஸ்பி கோகுல கிருஷ்ணன் தலைமையிலான டீம் விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகளை இன்னும் முழுமையாக உறுதி செய்யமுடியவில்லை. ஆதனால், சஸ்பெக்ட் ஆக வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் நடந்தபோது குற்றவாளிகள் ஒரு மணி நேரமாவது வீட்டில் இருந்திருப்பார்கள். உயிரிழந்தவர்கள் முகம், தலையில் மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் தொடர்பான முழுமையான விவரங்கள் வெளியிடப்படும்” என்கிறார்கள்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…