எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில், கைதான காவல் ஆய்வாளர் பிருத்விராஜுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இன்று (ஜூலை 17) உத்தரவிட்டுள்ளது.
கரூரில் ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக பிரகாஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர் பிரவீன் ஆகியோர் நேற்று கேரளாவில் கைது செய்யப்பட்டு, நள்ளிரவில் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டார். பின்னர் விஜயபாஸ்கர் திருச்சி சிறையிலும், பிரவீன் குளித்தளை கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே இந்த வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்பட்ட வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிருத்விராஜ் தலைமறைவான நிலையில், சிபிசிஐடி போலீசார் நேற்று இரவு கரூரில் கைது செய்தனர்.
அவர் கரூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியபோது நிலம் தொடர்பான ஆவணங்கள் தொலைத்து விட்டதாக சான்றிதழ் வழங்கியதன் பேரில் விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பான மேற்கட்ட விசாரணைக்காக பிருத்விராஜை கரூர் மாவட்ட சிபிசிஐடி போலீசார் இன்று காலை கரூர் திண்ணப்பா நகரில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து வந்து சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தி வந்தனர்.
அதன்பின்னர் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அவர் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது காவல் ஆய்வாளர் பிருத்விராஜுக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் வழங்கிய நீதிபதி பரத்குமார், அவரை மீண்டும் ஜூலை 31-ம் தேதி மீண்டும் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
இதனையடுத்து பிருதிவிராஜ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு உறுதியளித்த ராம்தாஸ் அத்வாலே
ஸ்டாலின் தேர்வு செய்த புதிய உள்துறை செயலாளர்: யார் இந்த தீரஜ் குமார்?