கோவை நீதிமன்ற வளாகம் அருகே பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய இருவர் இன்று (பிப்ரவரி 14) தப்பிக்க முயற்சித்த நிலையில் துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்துள்ளனர்.
கோவை கீரநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர் கோவை ஜே.எம்.2 நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்து போடுவதற்காக நேற்று வந்தார். அவருடன் அவரது நண்பர் மனோஜூம் வந்திருந்தார்.
கையெழுத்து போட்டுவிட்டு நீதிமன்றத்தை விட்டு சில அடிதூரம் வெளியே வந்த நிலையில், 5 பேர் கொண்ட கும்பல் கோகுலை சுற்றி வளைத்து அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டி கொன்றது.
இதனை தடுக்க முற்பட்ட கோகுலின் நண்பர் மனோஜிற்கு அரிவாள் வெட்டு விழுந்ததில் அவர் பலத்த காயமடைந்தார்.
இதுதொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியான நிலையில் இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொலை தொடர்பாக உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
கோவை மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களிலும் போலீசார் தீவிர வாகன தணிக்கை மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு குற்றவாளிகளை தேடிவந்தனர்.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் கொலை சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரின் செல்போன் எண்ணின் சிக்னல் கிடைத்ததைத் தொடர்ந்து அங்கு தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அதன் அடிப்படையில், காரில் வந்த 7 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை கோத்தகிரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே காவலரை தாக்கி, தப்பிக்க முயற்சித்த ஜோஸ்வா, கவுதம் என்ற இருவரின் கால்களை குறிபார்த்து துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்துள்ளனர்.
இதுதொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
தற்காப்புக்காக போலீசார் சுட்டனர்
அவர் பேசுகையில், “மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் காரில் வந்த குற்றவாளிகள் 7 பேரையும் போலீசார் பிடித்தனர்.
இதில் தப்பிய ஜோஸ்வா, கவுதம் இருவரும் பதுக்கி வைத்திருந்த அரிவாளை எடுத்து காவலர் யூசுபை தாக்கிய நிலையில் அவருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டது.
இதனைக்கண்ட எஸ்.ஐ உடனடியாக எச்சரித்துள்ளார். ஆனால் அவர்கள் மீண்டும் போலீசாரை தாக்க முயற்சித்த நிலையில், தற்காப்புக்காக இருவரும் தப்பித்து ஓட முடியாதபடி காலில் துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர்.
காயமடைந்த இருவரையும் உடனடியாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக சம்பவ இடத்தில் இருந்து சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் சுடப்பட்ட 2 பேர் உட்பட டேனியல், கவுதம், அருண்குமார், பரணி, சூர்யா என 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.” என்று தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
”தண்ணீர் இருக்கும் எல்லா இடத்திலும் தாமரை மலராது” – முதல்வர் ஸ்டாலின்
குரூப் 4 முடிவு எப்போது?: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!