சென்னை உயர் நீதிமன்றம் நேற்று p (செப்டம்பர் 30) பிறப்பித்த உத்தரவின்படி, இன்று (அக்டோபர் 1) கோவை மாவட்டத்தில் இருக்கும் ஈஷா யோக மையத்துக்குள் கோவை எஸ்.பி. தலைமையில் 100 போலீஸார் சென்று ஆய்வு நடத்தினர்.
ஆன்மீக குரு ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளை மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து கிரிமினல் வழக்குகளின் விவரங்களையும் சமர்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், வி. சிவஞானம் ஆகியோர் உத்தரவிட்டனர். அந்த உத்தரவின் பேரில்தான் இந்த விசாரணையும் ஆய்வும் நடக்கிறது.
அது என்ன வழக்கு?
கோவையைச் சேர்ந்த வேளாண் பல்கலைக் கழக ஓய்வுபெற்ற பேராசிரியர் எஸ்.காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “எனது மகள்களுக்கு முறையே 42, 39 வயதாகிறது. இருவரும் நன்கு படித்தவர்கள். ஈஷா யோக மையத்தில் சேர்ந்து சேவை செய்ய முதலில் அக்கா சென்றார். அவரைப் பார்த்து தங்கையும் சென்றார். இருவரும் சில வருடங்களாக வீட்டுக்கே வராமல் அங்கேயே தங்கிவிட்டனர். அவர்கள் ஈஷா யோக மையத்தில் நிரந்தரமாக தங்குவதற்கு “மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களை மீட்டுத் தர வேண்டும்” என்று கோரினார்.
‘இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அந்த இரு பெண்களையும் செப்டம்பர் 30-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டனர் நீதிபதிகள். அதன்படியே ஆஜரான இரு பெண்களும், “கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள யோக மையத்தில் நாங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் தங்கியிருக்கிறோம். எங்களை யாரும் விருப்பத்திற்கு மாறாக காவலில் வைக்கவில்லை” என்றும் தெளிவுபடுத்தினர்.
இந்நிலையில் அந்த பெண்களோடு சிறிது நேரம் உரையாட வேண்டும். அதன் பின் மேலும் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.
அதற்கு ஈஷா அறக்கட்டளை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.ராஜேந்திர குமார், ‘உங்கள் முடிவு ஆச்சரியமளிக்கிறது. வழக்கின் எல்லையை நீதிமன்றத்தால் விரிவாக்க முடியாது” என்றார்.
அதற்கு நீதிபதி சுப்பிரமணியம், “அரசியலமைப்பின் 226 வது பிரிவின் கீழ் உள்ள ரிட் அதிகார வரம்பைப் பயன்படுத்தி நீதிமன்றம் முழுமையான நீதியை வழங்கும்” என்று பதிலளித்தார்..
மேலும் ஈஷா வழக்கறிஞரைப் பார்த்து நீதிபதி சிவஞானம், “தனது மகளுக்கு திருமணம் செய்து கொடுத்து வாழ்க்கையில் நல்லபடியாக வாழவைத்த ஈஷா யோக மையத்தின் நிறுவனர், பிறருடைய மகள்களை துறவறத்துக்குத் தூண்டுவதில் என்ன நியாயம்?” என்று கேட்டார்.
அதற்கு ஈஷாவின் வழக்கறிஞர், “வயது வந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் தங்கள் சொந்த பாதையைத் தேர்வுசெய்ய சட்டத்தில் இடமுள்ளது. நீதிமன்றத்தின் சந்தேகத்தை உண்மையில் புரிந்து கொள்ள முடியவில்லை” என்றார்.
இந்நிலையில் மனுதாரர் காமராஜ் தரப்பு வழக்கறிஞர், எம். புருஷோத்தமன், “ஈஷா அறக்கட்டளை தொடர்பாக பல்வேறு குற்ற வழக்குகள் இருக்கின்றன” என்று கூறினார்.
இதையடுத்து, “ ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான குற்றவியல் உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் பட்டியலிட்டு, அக்டோபர் 4-ம் தேதிக்குள் அரசு வழக்கறிஞர் ராஜ் திலக் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர் நீதிபதிகள்.
இதையடுத்துதான் இன்று (அக்டோபர் 1) காலை 9.45 மணிக்கு கோவை எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையில் ஒரு பெண் ஏ.எஸ்.பி, ஆறு டி.எஸ்.பி.க்கள், 25 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 100 போலீஸார் கொண்ட டீம் ஈஷா யோக மையத்துக்குள் சரசரவென நுழைந்தது.
அங்கே இருக்கும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், 18 வயதுக்குள் இருப்பவர்கள், விசிட்டர்ஸ், ஈஷாவில் பணிபுரியும் ஊழியர்கள், அங்கே சந்நியாசம் பெற்று ஆன்மீகத் தொண்டாற்றுபவர்கள் என்று ஒவ்வொரு தரப்பினரிடமும் ஒவ்வொரு டீம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
காலை ஈஷாவுக்குள் சென்ற எஸ்.பி. கார்த்திகேயன் பகல் 12 மணியளவில் வெளியே சென்றார். பின் சில மணி நேரங்களில் மீண்டும் அவர் ஈஷாவுக்குத் திரும்பிவிட்டார். ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்களிடம் விசாரணை இன்று இரவு 8 மணி வரை நடந்தது.
இதற்கிடையில் ஈஷா இதற்கு விளக்கம் அளித்துள்ளது.
“ஈஷா அறக்கட்டளை சத்குரு அவர்களால் யோக மற்றும் ஆன்மீகத்தை மக்களுக்கு வழங்குவதற்காக நிறுவப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு தனிமனிதனும் குறிப்பிட்ட வயதுக்கு பிறகு அவரவர் வாழ்க்கை பாதையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தையும், ஞானத்தையும் வழங்கி உள்ளது.
ஈஷா யோக மையம் எவரையும் திருமணம் செய்து கொள்வதற்கோ அல்லது துறவறம் மேற்கொள்வதற்கோ கட்டாயப்படுத்துவதோ, உற்சாகப்படுத்தி உந்தி தள்ளவோ செய்வதில்லை. ஏனெனில் இவை அனைத்தும் தனிமனித சுதந்திரம் மற்றும் விருப்பம், இதில் தலையிட எவருக்கும் உரிமையில்லை என உறுதியாக நம்புகிறோம்.
ஈஷா யோக மையம் திருமணம் ஆன, ஆகாத ஆயிரக்கணக்கான மனிதர்கள் மற்றும் பிரம்மச்சரிய பாதையில் இருக்கும் ஒரு சிலரின் இருப்பிடமாக இருக்கிறது. உண்மை இவ்வாறு இருக்கையில் 2 பெண் பிரம்மச்சாரிகளின் பெற்றோர் கடந்த 8 வருடங்களாக பல்வேறு பொய் வழக்குகளை பதிவு செய்தும், உள்நோக்கம் கொண்ட சிலரின் தூண்டுதலால் போராட்டங்களை நடத்தி தேவையில்லாத சச்சரவுகளையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பிரம்மச்சரிய பாதையில் இருக்கும் தனது மகள்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கோரி அவர்களின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தார். இதனைத் தொடர்ந்து இரண்டு பிரம்மசாரிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகி, தங்களின் சொந்த விருப்பத்தின் பேரில்தான் ஈஷா யோக மையத்தில் தங்கியுள்ளோம் என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.
அது மட்டுமில்லாமல் மிக சமீபத்தில் காமராஜ் ஈஷா யோக மையம் சென்று தன்னுடைய மகள்களை சந்தித்த CCTV காட்சிகளும் ஆதாரங்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டு உள்ளது. மேலும் இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், தேவையான அனைத்து ஆதாரங்களையும் வழங்கி உள்ளதால் உறுதியாக உண்மை வெல்லும் என்று நம்புகிறோம். மேலும் இதுவரை போலியாக உருவாக்கப்பட்ட அனைத்து தேவையற்ற சர்ச்சைகளும் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
மேலும், 2016-ஆம் ஆண்டு இதே காமராஜ் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தீர விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி கோவை மாவட்ட நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று கோவை ஈஷா யோக மையத்தில் மா மதி மற்றும் மா மாயு ஆகிய இருவரையும் சந்தித்து நீதி விசாரணை நடத்தியது.
அவர்களின் அறிக்கையின் படி தீர்ப்பு அளிக்கப்பட்டு அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த தீர்ப்பில் நீதிபதிகள் “பெற்றோர் தொடுத்த வழக்கில் உண்மையில்லை, பிடித்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டவர்கள் அந்த மையத்தில் தங்களது சுயவிருப்பத்திலேயே தங்கி இருக்கிறார்கள் என்று திட்டவட்டமாக தெரிவிக்கிறோம்,” என்று கூறியுள்ளார்கள். மனுதாரர் பொய்யாக குறிப்பிட்டதை போன்று அறக்கட்டளைக்கு எதிராக வேறு எந்த கிரிமினல் வழக்குகளும் இல்லை. ஆகவே ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தவறான தகவல்களை பரப்புவதில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளது.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கொள்ளையர்களைப் பிடித்த நாமக்கல் போலீஸ் டீம்… நேரில் பாராட்ட செல்லும் டிஜிபி!
அப்பல்லோவில் கஞ்சி அருந்திய ரஜினி