இரண்டு ரவுடிகள் என்கவுன்டர்: டிஜிபி விளக்கம்!

Published On:

| By Monisha

police encounter 2 rowdys

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 1) அதிகாலை இரண்டு ரவுடிகள் என்கவுன்டர் செய்யப்பட்டது குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரி அருகே காரணை – புதுச்சேரி சாலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்த முற்பட்ட போது, கார் நிற்காமல் உதவி ஆய்வாளர் மீது மோதுவது போல சென்று போலீஸ் ஜீப் மீது மோதியது. மேலும் அந்த காரில் இருந்த 4 பேர் ஆயுதங்களுடன் உதவி ஆய்வாளர் சிவகுருநாதனை அரிவாளால் தாக்க முயன்றனர். இதனால் போலீஸ் அதிகாரிகள் நடத்திய என்கவுன்டரில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இரண்டு பேர் ஆயுதங்களுடன் தப்பி சென்றனர்.

தொடர்ந்து காயமடைந்த உதவி காவல் ஆய்வாளர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை இன்று மாலை நேரில் சந்தித்து டிஜிபி சங்கர் ஜிவால் நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கூடுவாஞ்சேரி துணை காவல் ஆய்வாளர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்குரிய வகையில் வந்து கொண்டிருந்த ஸ்கோடா (SKODA) வண்டியை நிறுத்த முயன்றனர்.

அப்போது, அதிகாரிகள் மீது மோதுவது போல வந்து போலீஸ் வண்டி மீது மோதியுள்ளனர். மேலும் போலீஸ் அதிகாரியை தாக்குவதற்கு முயற்சி செய்துள்ளார்கள்.

இதில் துணை காவல் ஆய்வாளருக்கு தலையில் காயம் ஏற்பட்டிருக்க வேண்டியது. ஆனால் ஏதும் ஆகவில்லை. இருப்பினும் அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

காவல் ஆய்வாளர் மற்றும் துணை காவல் ஆய்வாளர் இருவரும் முன்னெச்சரிக்கையாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். காவல் ஆய்வாளர் ஒருவரையும், துணை காவல் ஆய்வாளர் ஒருவரையும் சுட்டுள்ளனர். இதில் இரண்டு பேருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். உயிரிழந்த இருவரும் ஏ+ ரவுடிகள் தான்.

தப்பி சென்ற இரண்டு பேரை தேடிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் இருவர் மீதும் கொலை வழக்குகள் இருக்கின்றன. ரவுடிகள் விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதை அப்படியே தொடருவோம்” என்று தெரிவித்தார்.

மோனிஷா

மோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: எதிர்க்கட்சிகள் வெல்லுமா?

ஓபிஎஸ் – டிடிவி… ஆர்ப்பாட்ட நாடகம்: ஜெயக்குமார் கண்டனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.