அண்ணா பல்கலைக் கழக மாணவி வழக்கில் பதிவான எப்.ஐ.ஆர் காவல்துறை தரப்பில் இருந்து கசியவில்லை. அதற்கான ஆதாரங்கள் இருக்கிறது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலை கழக மாணவி கடந்த 23ஆம் தேதி இரவு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கின் எப்.ஐ.ஆர் நேற்று இணையத்தில் வெளியானது.
பாலியல் வன்கொடுமை வழக்கின் எப்.ஐ.ஆர் வெளியானது எப்படி என்று கேள்வி எழுந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இது நடந்திருக்கலாம் அல்லது பாதிக்கப்பட்ட தரப்பு மூலமாக வெளியாகியிருக்கலாம். இதுதொடர்பாக தனியாக ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சென்னை காவல் ஆணையர் அருண் கூறியிருந்தார்.
இந்நிலையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல் துறையினரின் விசாரணையில் குறைபாடுகள் உள்ளதாகவும், சட்டப்படி பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது. எனினும் வழக்கின் எப்.ஐ.ஆர் காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது என்பதால் இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்றும் பெண் வழக்கறிஞர் வரலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இன்று (டிசம்பர் 27) கடிதம் எழுதினார்.
அதில், “இந்த வழக்கில் காவல்துறை ஒருவரை கைது செய்திருக்கிறது. ஆனால் அந்த பெண்ணின் வாக்குமூலத்தில் மற்றொரு நபரையும் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 27)நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.லட்சுமி நாராயணன் முன்பு வழக்கறிஞர் வரலட்சுமி தரப்பில் வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் ஆஜரானார்.
அவர், “இந்த கடிதத்தின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, அண்ணா பல்கலை மாணவி வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
மற்றொரு வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி, “எப்.ஐ.ஆரை வெளியிட்டதன் மூலம், பாதிக்கப்பட்ட மாணவியின் ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமல்லாமல் அனைத்து கல்வி நிறுவனங்களின் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. எனவே இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க வேண்டும்” என்று கோரினார்.
இந்த முறையீடுகளை ஆய்வு செய்த நீதிபதிகள், “காவல்துறையினரின் புலன் விசாரணையில் தீவிரமான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே பெண் வழக்கறிஞர் வரலட்சுமி கடிதத்தின் அடிப்படையில் இந்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும்” என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து, இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் பதிவாளர், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டனர்.
தொடர்ந்து இவ்வழக்கில் தமிழக அரசு மற்றும் காவல்துறையின் விளக்கத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை மதியம் 2.15 மணிக்கு ஒத்தி வைத்தனர்.
மீண்டும் பிற்பகல் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன், “காவல்துறை தரப்பில் எப்.ஐ.ஆர் வெளியிடப்படவில்லை. அதற்கான ஆதாரங்கள் உள்ளன. தற்போது, எப்.ஐ.ஆரை மற்றவர்கள் யாரும் பயன்படுத்த முடியாத படி மறைக்கப்பட்டுள்ளது” என கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுப்பதற்கு தலைமை நீதிபதியின் ஒப்புதல் தேவைப்படுகிறது. அதற்கு முன் வழக்கு தொடர நினைப்பவர்கள் முறைப்படி வழக்கு தாக்கல் செய்யலாம் என்றும் வழக்கு எண்ணிடும் பணி முடிந்ததும் விசாரணைக்கு எடுக்கப்படும் என்றும் கூறினர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
அண்ணா பல்கலை மாணவி வழக்கு : சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை
ரயிலில் தள்ளி பரங்கிமலை மாணவி கொலை : கைதான சதீஷ் குற்றவாளி என தீர்ப்பு!