ஐ எம் சாரி ஐயப்பா.. உள்ளே வந்தால் என்னப்பா’’ என ஐயப்பன் குறித்து இயக்குநர் பா ரஞ்சித்தின் இசை குழுவில் உள்ள கானா பாடகி இசைவாணி பாடிய பாடல் சர்ச்சையான நிலையில் பக்தர்கள் அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.
பிரபல இயக்குநர் பா. ரஞ்சித் நீலம் பண்பாட்டு மையத்தை நடத்தி வருகிறார். இந்த பண்பாட்டு மையத்தில் ‛கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ என்ற இசைக்குழு உள்ளது. இந்த குழுவில் இசைவாணி உள்ளார். தற்போது கார்த்திகை மாதம் என்பதால், ஐயப்ப பக்தர்கள் விரதம் மேற்கொண்டு சபரிமலைக்கு செல்ல தொடங்கியுள்ள நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு இசைவாணி பாடிய பாடல் சர்ச்சையாகியுள்ளது.
அதில், இசைவாணி, ‛‛ஐ ஆம் சாரி ஐயப்பா.. நான் உள்ளே வந்தால் என்னப்பா..” என்று தொடங்கும் பாடலை பாடுகிறார். சபரிமலைக்கு 10 வயதுக்கு மேற்பட்டும் 50 வயதுக்குள்பட்ட பெண்களும் செல்ல தடை இருப்பதை குறிப்பிட்டு இந்த பாடலை அவர் பாடினார். அதோடு, இசைவாணி கழுத்தில் சிலுவை வேறு அணிந்து கொண்டு இந்த பாடலை பாடியதால், ஐயப்ப பக்தர்கள் கொந்தளித்து போனார்கள்.
இதுதொடர்பாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஐயப்பா பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரில், இசைவாணி கழுத்தில் சிலுவை அணிந்துள்ளார். இயேசுவை புகழ்ந்து அவர் பாடல் பாடியுள்ளதோடு, மேடையில் தற்போது ஐயப்பனை இழிவுப்படுத்தும் வகையில் பாடல் பாடியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் பா ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தனக்கு மிரட்டல் வருவதாக கூறி, பாதுகாப்பு கேட்டு இசைவாணியும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஷாஹி ஜமா மஸ்ஜித் கலவரம்… 5 பேர் பலி: உத்தரப் பிரதேசத்தில் நடப்பது என்ன?