புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வதால் ஜிப்மர் மருத்துவமனை பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இங்கு நாடு முழுவதிலும் இருந்து பணியாற்றும் மருத்துவர்களுக்கு தொகுப்பு வீடுகளும், மருத்துவ மாணவர்களுக்காக விடுதியும் தனித்தனியாக உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மருத்துவ மாணவர்களின் விடுதியில் இருந்து அடிக்கடி விலை உயர்ந்த ஆப்பிள் லேப்டாப், ஐபோன் உள்ளிட்டவை காணாமல் போவதாக புகார்கள் வந்தன.
சமீபத்தில் ஜனவரி 8ஆம் தேதி மருத்துவ மாணவர் ஒருவரின் லேப்டாப் ஒன்று திருடு போனது. இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் புதுச்சேரி தன்வந்திரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் புதுச்சேரி காவல்துறை உயரதிகாரி ஐபிஎஸ் கலைவாணனையும் நேரில் சந்தித்து, விடுதியில் நடந்து வரும் தொடர் திருட்டு புகாரை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து புதுச்சேரி வடக்கு மண்டல எஸ்.பி. வீரவள்ளுவனிடம், இந்த புகார் குறித்து சிறப்பு கவனம் செலுத்துமாறு உத்தரவிட்டார். அதன்பேரில் அவரது தலைமையில் தன்வந்திரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ.க்கள் ரமேஷ், கோவிந்தன் ராஜூ ஆகியோருடன் தனி டீம் அமைக்கப்பட்டது.
முதலில் ஜிப்மர் முகப்பில் இருந்து, அந்த வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை அனைத்தையும் சேகரித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் திருட்டு நடைபெற்ற 8ஆம் தேதி மருத்துவ கல்லூரி மாணவர் போன்று, பேக் மாட்டிக்கொண்டு டிப்டாப் ஆக ஒரு ஆசாமி ஜிப்மருக்குள் வந்துவிட்டு வெளியே போவது தெரியவந்தது.

தொடர்ந்து அந்த நபரின் புகைப்படத்தை ஒப்பிட்டு பார்த்தில், அவர் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்தது. (வயது 44)
சென்னை பெருங்களத்தூரில் பதுங்கியிருந்த அவரை தமிழ்நாடு போலீஸ் உதவியுடன் புதுச்சேரி போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரித்ததில், ”நான் சேலத்தில் டீக்கடை நடத்தி வருகிறேன். ஆனால் அது வெறும் பெயருக்காக தான். பரபரப்பான இடத்தில் திருடுவதை நான் கடந்த 10 ஆண்டுகளாக வழக்கமாக வைத்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
கார்த்திக் மீது ஏற்கெனவே சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 10 மேற்பட்ட வழக்குகள் உள்ளன. திருடும் விலை உயர்ந்த லேப்டாப் மற்றும் போன்களை விற்றுவிட்டு, அந்த காசில் உல்லாசமாக இருப்பதும், காசு கரைந்த மற்ற நாட்களில் தனது டீக்கடையில் வேலை செய்வதும், அப்போது அடுத்த திருட்டிற்காக திட்டமிடுவதும் என வழக்கமாக இருந்துள்ளார்.
இதற்கிடையே புகாரளித்த மாணவரின் லேப்டாப்பை மீட்ட போலீசார், கைதான கார்த்திக்கை சிறையில் அடைத்தனர்.

பரிதாபப்பட்டவரிடமே திருட்டு!
இதேபோன்று நடந்த மற்றொரு நூதன திருட்டு சம்பவத்தையும் புதுச்சேரி போலீசார் கண்டறிந்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் 27, 28, 29ஆம் தேதிகளில் புதுச்சேரியில் இருந்து கோரிமேடு செல்லும் பேருந்துகளில் நகை, பணம் திருடு போனதாக புகார்கள் எழுந்தன.
இந்த வழக்கையும் காவல்துறை உயரதிகாரி ஐபிஎஸ் கலைவாணன் உத்தரவின் பேரில், எஸ்.பி. வீரவள்ளுவன் தலைமையிலான அதே டீம் விசாரணை மேற்கொண்டது.
சிசிடிவி அடிப்படையில் எழுந்த சந்தேகத்தின் பேரில் திருப்பத்தூர் மாவட்டம் ஆசாரி நகர் பகுதியைச் சேர்ந்த சோலையம்மாள் என்ற பெண்ணை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர் கூறியதை கேட்டு போலீசாரே ஷாக் ஆகினர். “திருப்பத்தூரில் இருந்து நான், எனது கணவர் மற்றும் 2 வயது குழந்தையுடன் வெளியூருக்கு வேலை செல்வதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறிவிட்டு புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா என கிளம்புவோம். குறிப்பிட்ட இடத்தில் இருந்து இறங்கி அவர் தனியாகவும், நான் எனது குழந்தையுடனும் தனித்தனியாக திருட செல்வோம்.
புகாரில் கூறியுள்ளபடி, கடந்த நவம்பர் மாதம் நான் மட்டும் எனது குழந்தையுடன் புதுச்சேரிக்கு வந்தேன். பொதுவாக கூட்டமான பேருந்தில் வயதானவர்களை குறிவைத்து அவர்கள் முன் கையில் குழந்தையுடன் சிரமப்படுவதாக காட்டிக்கொள்வேன். அவர்களும் இரக்கப்பட்டு குழந்தையை பெற்றுக்கொள்வர். அதன்பின்னர் அவர்கள் சற்று அசரும் நேரத்தில், குழந்தையை கொஞ்சுவது போன்று நகை, பணத்தை எடுத்துக்கொண்டு பேருந்தில் இருந்து இறங்கிவிடுவேன்” என தெரிவித்துள்ளார்.
பிடிபட்ட சோலையம்மாள் மீது ஏற்கெனவே கர்நாடகா, ஆந்திரா ஆகிய இடங்களில் வழக்குகள் உள்ளது. அவரை கைது செய்து 6 பவுன் தங்க நகை மற்றும் 3 லட்சம் பணத்தை மீட்ட போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். அவருடையை கணவரை தேடி வருகின்றனர்.