திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி விவேகானந்தா சேவாலயத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்ததற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி காப்பகத்தின் முன் முற்றுகையிட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் செயல்பட்டு வரும் விவேகானந்தா சேவாலய காப்பகத்தில் நேற்று (அக்டோபர் 6) காலை உணவு சாப்பிட்ட 14 சிறுவர்கள் மயக்கம் அடைந்துள்ளனர்.
இதில் 3 சிறுவர்கள் உயிரிழந்த நிலையில் 11 சிறுவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 5 விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
இந்த விசாரணைக் குழுக்கள் இன்று (அக்டோபர் 7) காப்பகத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் வினீத் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
ஆய்விற்குப் பிறகு இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், “காப்பகம் முறையான பாதுகாப்பின்றி செயல்பட்டு வருகிறது. காப்பக நிர்வாகத்தின் அஜாக்கிரதையால் சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆகையால் காப்பகம் மூடப்படுகிறது.

காப்பக நிர்வாகிகளின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். இந்த சம்பவம் குறித்து விசாரித்து 48 மணி நேரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சிறுவர்களின் மரணத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இன்று மாலை போராட்டத்தில் ஈடுபட முயன்றுள்ளனர்.
அப்போது காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக த.பெ.தி.க., இந்திய கம்யூனிஸ்ட், வி.சி.க. உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து திருமுருகன்பூண்டி பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
மோனிஷா