திருப்பூர் கொடூரம்… மேற்கு மண்டலத்தில் தொடரும் ஆதாய கொலைகள்!

தமிழகம்

திருப்பூரில் நடந்த படுகொலை குறித்து  போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஊராட்சியில் பல்லடம் அருகே கண்டியன் கோயில் – வலுப்பூரம்மன் கோயில் செல்லும் வழியில் சேமலைக்கவுண்டம்பாளைம் கிராமம் உள்ளது.

இங்குள்ள வயல்வெளி பகுதியில் பண்ணை வீட்டில் தெய்வ சிகாமணி(78), அலமேலு என்கிற அலமாத்தாள் (75) ஆகியோர் வசித்து வந்தனர்.

இவர்களது மகன் செந்தில் குமார்(46). ஒரு மகளும் உள்ளார். மகன் திருமணமாகி கோவையில் தனது மனைவி, குழந்தையுடன் வசித்து வந்தார்.

திருமணத்துக்கு பின் இவர்களது மகள் சென்னிமலையில் வசித்து வருகிறார். தெய்வசிகாமணியும், அலமேலுவும் கிராமத்தில் விவசாயம் செய்துவந்தனர்.

இந்நிலையில் உறவினர் வீட்டில் நடந்த நிச்சயதார்த்துக்காக செந்தில்குமார் கோவையில் இருந்து நேற்று சேமலைக்கவுண்டம்பாளைம் வந்தார்.

நேற்று இரவு தனது தாய் தந்தையுடன் பண்ணை வீட்டில் தங்கினார் செந்தில்குமார்.

மூவரும் இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் 5 பேர் கொண்ட கும்பல் இவர்களது வீட்டுக்குள் புகுந்துள்ளது.

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அலமேலு கழுத்தை அறுத்து அவர் அணிந்திருந்த தாலி செயின் உள்ளிட்ட நகைகளை எல்லாம் கழட்டி கொண்டு, பின்னர் வீட்டில் உள்ள அனைத்து அறைகளையும் அலசி ஆராய்ந்து பீரோவில் இருந்த நகைகளையும் திருடிச் சென்றுள்ளனர்.

அடையாளம் தெரியாத நபர்கள் கத்தி, கட்டை, இரும்புராடால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அலமேலுவும், மகன் செந்தில் குமாரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில் செந்தில்குமார் ஏற்கனவே வரசொல்லியிருந்த சவரத்தொழிலாளி வாழப்பூரான் இன்று காலை இவர்களது வீட்டுக்கு வந்தார். அப்போது தெய்வ சிகாமணி படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததையும், அலமேலு மற்றும் செந்தில்குமார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர், அக்கம் பக்கத்தினரை கத்தி  அழைத்து தகவலை சொல்ல, அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தெய்வசிகாமணியை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

இந்தநிலையில் சம்பவ இடத்துக்கு சென்ற மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார், திருப்பூர் மாநகர் காவல் ஆணையர் லட்சுமி, டிஎஸ்பி சுரேஷ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த பண்ணை வீட்டில் சிசிடிவி இல்லை. இதனால் அவர்களது வீட்டுக்கு செல்லக்கூடிய வழியில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த கொலை குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது,

“திருப்பூர், ஈரோடு பகுதிகளில் முன்பு ஆதாயக்  கொலைகள் நடந்திருக்கின்றன. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, சிவகங்கை மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே இந்த கொலையை செய்தவர்களும் தென் மாவட்ட பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், அல்லது வட மாநிலங்களில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்.

ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, வெளியூர், வெளிமாநிலத்தில் இருந்து வந்து வேலைக்காக தங்கியிருப்பவர்கள், அவர்களுடன் தற்காலிகமாக தங்கியிருந்தவர்கள் விவரங்களையும் சேகரித்து வருகிறோம்.

செல்போன் டவர் லோக்கேஷன் மற்றும் போன் கால் விவரங்களையும் ஆய்வு செய்து வருகிறோம்” என்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வணங்காமுடி

‘சொர்க்கவாசல்’ திருடப்பட்ட கதையா? ஆர்.ஜே.பாலாஜி இப்படிப்பட்டவரா?

திண்டுக்கல்: தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *