திருவண்ணாமலை தீபத்தில் அவமதிக்கப்பட்டாரா கலெக்டர்? முதல்வர் வரை சென்ற பஞ்சாயத்து! பின்னணி என்ன?

Published On:

| By Kavi

திருவண்ணாமலை தீபத்தின் போது, பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் வீடியோ சமூக தளங்களில் வைரலானது. இந்நிலையில் இவ்விவகாரம் தற்போது முதல்வர் அலுவலகம் வரை சென்றிருக்கிறது.

கடந்த ஆண்டுகளில் திருவண்ணாமலை தீபத்தை முன்னிட்டு பரணி மற்றும் மகா தீபத்தை பார்க்க விஐபி, விவிஐபிகளுக்கு அச்சிடப்பட்ட ரசீதுகள் வழங்கப்பட்டு வந்தன.

அந்த ரசீதுகளை போலியாகவும் அச்சடித்து வியாபார நோக்கத்துடன் பக்தர்களுக்கு வழங்கியதால் கோயிலுக்குள் மூன்று மடங்கு கூட்டம் அதிகரித்து நிற்க முடியாமல் சிக்கி தவிக்கும் நிலை இருந்து வந்தது.

அதுபோன்று கார் பாஸ்களையும் போலியாக அச்சடித்து சில கும்பல் விற்பனை செய்ததால், போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருந்தது.

அதனால் இந்த ஆண்டு, கோயிலுக்குள் வரக்கூடிய கூட்ட நேரிசலை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் நவீன முறையில் பாஸ்கள் வழங்கப்பட்டன.

அதாவது அறநிலையத்துறையுடன் காவல்துறை இணைந்து RFID பொறுத்தப்பட்ட பாஸ்களை வழங்கி, போலியான அனுமதி சீட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
இந்த RFID பாஸ் இருந்தால் ஒருவர் ஒருமுறைதான் கோயிலுக்குள் செல்ல முடியும். கோயிலில் இருந்து வெளியே வந்துவிட்டு மீண்டும் உள்ளே செல்ல முடியாது.

இது சாதாரண மக்கள் முதல் உயரதிகாரிகள் வரை அனைவருக்கும் பொருந்தும்.
இந்தநிலையில் தீபம் அன்று விஐபிகள் செல்லக்கூடிய அம்மணி அம்மன் கோயில் வழியாக சென்ற பாஸ் இல்லாத கார்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அதில் ஒரு கார்தான் மாவட்ட கலெக்டர் கார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பாஸ் வேண்டும் என்று கேட்டபோதுதான், அங்கிருந்தவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலானது.

அதில், “எங்கள ஏன் உள்ள அனுப்ப மாட்றீங்க.. என்ன டியூட்டி பாக்குறீங்க… ஒரு கலெக்டர மறிச்சிட்டு இருக்கீங்க… காவல்துறைய அனுப்புறீங்க” என்று சத்தம் போடுவதும் பேரிகார்டுகளை தள்ளுவதும் பதிவாகியுள்ளது.

இந்த பிரச்சினை இன்று வரை காவல்துறைக்கும் வருவாய் துறைக்கும் இடையே தொடர்ந்து வருகிறது.

மாவட்ட கலெக்டரை போலீசார் அவமதித்துவிட்டனர் என்று கூறி திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு வட்டார வளர்ச்சித் துறையினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்கக்கூடாது என்றும், போலீசார் யாரும் அங்கு போகக் கூடாது என்றும் காவல்துறை உயரதிகாரிகள் வாய்மொழி உத்தரவு போட்டுள்ளனர்.

இருந்தாலும் எஸ்.பி தனிப்பிரிவு போலீசாரும் மற்றும் சிவில் உடையில் சென்ற போலீசாரும் ஆர்ப்பாட்டத்தில் பேசியதை வீடியோவாக பதிவு செய்து மேலிடத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

மறுபக்கம் இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட போராட்டங்களுக்கும் அரசு ஊழியர்கள் சங்கம் ஆலோசனை செய்து வருகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலையில் என்னதான் நடந்தது என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அலுவலகத்தில் விசாரித்தோம்.

“தீபத் திருவிழாவை சிறப்பாக, பாதுகாப்பாக நடத்த அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்பட்டார் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்.
டிசம்பர் 4ஆம் தேதி காலை 6.30 முதல் 7 மணிக்குள் கொடி ஏற்றுவதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல் கொடுத்து வரசொன்னார்கள். அன்று மாவட்ட ஆட்சியர் சரியாக 6.30 க்கு கோயிலுக்குள் சென்றார். அவர் மட்டுமல்ல துணை சபாநாயகர் பிச்சாண்டியும் 6.30 மணிக்கு வந்தார்.

ஆனால் அறநிலையத்துறை அதிகாரிகளும், கோயில் நிர்வாகமும் கலெக்டர் வருவதற்கு முன்பே, அதாவது 6.20 மணிக்கே கொடி ஏற்றிவிட்டனர்.

அப்போதே கலெக்டர் மிகவும் வருத்தப்பட்டார். ஆரம்பமே கலெக்டரை அவமானப்படுத்தும் வகையில் இருந்தது. தீபத்தன்று கலெக்டரின் குடும்பத்தினர் மற்றும் மற்ற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் சென்றனர்.

அப்போது பேரிகார்டுகள் போட்டு தடுத்து நிறுத்தினார்கள். கலெக்டர் வந்திருக்கிறார் என்று சொல்லியும் விடவில்லை. கலெக்டரே நேராக வந்து , ‘நான் கலெக்டர்… நான் யாரிடம் அனுமதி கேட்க வேண்டும்” என்று சொல்கிறார். அப்போதும் விடவில்லை. இதையெல்லாம் மக்களும் வேடிக்கை பார்த்தனர்.

போலீசாரே இப்படி கலெக்டரை அவமதித்தால்… அவருடைய உத்தரவை மற்றவர்கள் எப்படி மதிப்பார்கள்? இது மிகவும் கண்டிக்கத்தக்கது. வேதனையானது.

மூன்றாவது சம்பவமாக, கோயிலுக்குள் கலெக்டருடன் சென்ற டவாலியை அங்கிருந்த ஒரு எஸ்.பி, ‘கலெக்டருக்கு மட்டும் தான் அனுமதி… டவாலிக்கு அனுமதியில்லை” என்று தடுத்தார். போலீசாருடன் கலெக்டர் சண்டை போட்டுதான் அவருடன் நிற்க வைத்தார்.
தலையில் தொப்பி எல்லாம் அணிந்து கொண்டு டவாலி உடையில் வந்திருக்கிறார். அப்படியானால் அவர் கலெக்டருடன் தான் வந்திருக்கிறார் என்று போலீசாருக்கு தெரியாதா? போலீசாரின் செயல்பாடுகளால் கலெக்டர் நொந்துபோய் இருக்கிறார்” என்றனர்.

மாவட்ட ஆட்சியர் தரப்பின் குற்றச்சாட்டுகள் பற்றி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம்…

“கொடி ஏற்றும் நிகழ்ச்சி அன்று கலெக்டர் வருவதற்கு முன்பு கொடி ஏற்றியது அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் நிர்வாகமும் செய்த தவறு. இதில் போலீசாருக்கு எந்த பங்கும் இல்லை.

கோயில் நிர்வாகிகள் பாதுகாப்பில் இருந்த போலீசாருக்கே பல நெருக்கடிகள் கொடுத்தனர். அதையெல்லாம் மீறிதான் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதிவரை 4 இரவு, 4 பகல் சரியான உறக்கம் இல்லாமல், முழு நேரமும் பணி செய்திருக்கிறார்கள் போலீஸார்.

இந்த ஆண்டு போலி பாஸ்களை தடுக்கும் வகையில் சென்சார் பொருத்திய பாஸ்கள் வழங்கியதால் கோயிலுக்குள் நெரிசல் இல்லாமல் இருந்தது. எந்த விஐபிகளுக்கும் நெருக்கடி ஏற்படவில்லை. மக்களுக்கும் எந்த தொந்தரவும் ஏற்படவில்லை.
சரியான பாஸ்களை வழங்கியதால் கார்களும் சாலை ஓரத்தில் நிற்காமல், அதன் உரிமையாளர்கள் பார்க்கிங்கிலும், குறிப்பிட்ட இடத்திலும் நிறுத்தினர். அதனால் டிராபிக் இல்லாமல் இருந்தது.

தீபத்தன்று விஐபிகள் வரக்கூடிய வழியில், கலெக்டர் வாகனங்களுக்கு முன் 4 வண்டிகளும், அதற்கு பின்னால் சில வண்டிகளும் வந்தன.

அப்போது பாஸ் இல்லாத வண்டிகளை நிறுத்தினோம். எங்கள் உயரதிகாரிகள், பாஸ் இல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது என்று கட்டாயமாக தெரிவித்துவிட்டனர். அதன் படி பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

மாவட்ட கலெக்டர், அவரது வாகனத்தில் வந்திருந்தால் சல்யூட் அடித்து வழிவிட்டிருப்போம். ஆனால் அவர் தனியார் வண்டியில் வந்திருந்தார்.
அங்கிருந்த போலீசாரும் வெவ்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இருந்தாலும் கலெக்டர் என்று தெரிந்ததும் அவரை உள்ளே அனுமதித்தோம். மற்ற வண்டிகளுக்கு பாஸ் இல்லாததால் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

அப்போது கலெக்டர்தான் ஒருமையில் பேசினாரே தவிர… நாங்கள் அப்படி நடந்துகொள்ளவில்லை.

‘வாயா போயா’ என்று பேசினார். பேரிகார்டுகளை தூக்கி எறிய சொன்னார்.
இந்த சம்பவம் சோஷியல் மீடியாக்களில் பரவியது. இதையடுத்து மேல் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி மாவட்ட எஸ்.பி. சுதாகர், கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று கலெக்டரிடம், ‘சாரி’ கேட்டார்” என்றனர்.

எஸ்.பி., கலெக்டரிடம் வருத்தம் தெரிவித்தாலும் தொடர்ந்து வருவாய் துறையினருக்கும், காவல்துறையினருக்கும் இடையேயான ஈகோ தொடர்வதால், இந்த விவகாரம் முதல்வர் அலுவலகம் வரை சென்றுள்ளது.

”இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முதல்வர் அலுவலகம் முயற்சி எடுத்துள்ளது என்கிறார்கள்” கோட்டை வட்டாரத்தில்.

வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: சித்திரை!

ஒரே நாடு ஒரே தேர்தல் – அரசியலமைப்பு மீதான தாக்குதல் : ஆ.ராசா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel