கோவை மாநகர காவல் துறையின் சார்பில், கல்லூரி படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ‘போலீஸ் அக்கா’ திட்டத்தை மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்துள்ளார்.
சமீபகாலமாக சிறார்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியிலான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதைத் தடுக்க காவல் துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை மாநகரில் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் என 60 கல்லூரிகள் உள்ளன.
இந்தக் கல்லூரிகளை மையப்படுத்தி, இங்கு படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ‘போலீஸ் அக்கா’ என்ற திட்டம் மாநகர காவல்துறையின் சார்பில் நேற்று (அக்டோபர் 18) தொடங்கப்பட்டது.
இதுகுறித்து பேசியுள்ள கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், ‘‘மாநகரில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும், ஒரு மகளிர் காவலர் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளை தொடர்பு கொண்டு அவர்களுடன் கலந்துரையாடுவது, அவர்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியிலான, பாலியல் ரீதியிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது,
கல்லூரிகளில் நடக்கும் கருத்து மோதல்களை கண்டறிந்து தீர்ப்பது, போதைப் பொருட்கள் விற்பனை உள்ளிட்டவற்றை கண்டறிந்து காவல்துறையின் கவனத்துக்கு கொண்டு வருவது போன்ற பணிகளை மேற்கொள்வர்.
இவர்கள் மாணவிகளுக்கு நல்ல சகோதரியாக செயல்பட்டு அவர்கள் அளிக்கும் தகவல்களை ரகசியம் காப்பர்.
மாநகரில் உள்ள 60 கல்லூரிகளுக்கு 37 பெண் காவலர்கள் ‘போலீஸ் அக்கா’வாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களது தொடர்பு எண்கள் கல்லூரி வளாகத்தில் மாணவிகள் பார்வையில்படும்படி வைக்கப்பட்டிருக்கும்’’ என்று கூறியுள்ளார்.
-ராஜ்
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு பவன் கல்யாண் எச்சரிக்கை!
எடப்பாடி உண்ணாவிரதம்: காவல் துறை அனுமதி மறுப்பு!