என்.எல்.சி நிறுவனம் விவசாய நிலங்களை கையப்படுத்துவதை கண்டித்து பாமக சார்பில் இன்று (மார்ச் 11) முழு அடைப்பு போராட்டம் அறிவித்த நிலையில், 100 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்.எல்.சி நிறுவனத்தில் 2-வது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கத்தாழை, கரிவெட்டி, கீழ்பாதி, மேல்பாதி பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப்பட்டிருந்தது.
நிலம் கையகப்படுத்தப்பட்ட பகுதிகளில், நிலங்களை சமன்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனை கண்டித்து பொதுமக்கள் மற்றும் பாமக, அதிமுக கட்சிகளை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ அருண் மொழித்தேவன் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் என்.எல்.சி நிறுவனம் நிலம் கையப்படுத்துவதை கண்டித்து இன்று பாமக சார்பில் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. முழு அடைப்பு போராட்டமானது காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாத வகையில், 10 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 7 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலையில் டீக்கடைகள், உணவகங்கள் திறக்கப்பட்டு வழக்கம்போல் இயங்கி வருகின்றது. கடலூர் மாவட்டத்தில் 100 சதவிகிதம் அரசு பேருந்துகளும் 50 சதவிகிதம் தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.
கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் தனியார் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படவில்லை. அரசு பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது.
புதுவை மாநிலத்திலிருந்து கடலூர் வரும் அரசு பேருந்துகள் கடலூர், புதுச்சேரி எல்லையான முள்ளோடை பகுதியில் நிறுத்தப்படுகிறது.
செல்வம்