பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (ஏப்ரல் 25) தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி முடிவடைந்தது. இத்தேர்வை மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.
அதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் 79 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 10-ம் தேதி முதல் நடைபெற்றது.
தொடர்ச்சியாக மதிப்பெண்களை பதிவேற்றும் செய்யும் பணிகள் முடிவடையும் நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்து இருந்தது.
இதற்கிடையே நீட் தேர்வு முடிவு வெளியான பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிடலாமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில்,
“மாணவர்களின் நலன் கருதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்படும். மே 7ஆம் தேதிக்கு பின்னர் தேர்வு முடிவை வெளியிடுவது குறித்து முதலமைச்சருடன் ஆலோசிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 7-ம் தேதி நடைபெற உள்ளது.
இத்தேர்வினை நாடு முழுவதும் சுமார் 20.87 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை லட்சம் பேர் நீட் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
வேங்கைவயல் டி.என்.ஏ பரிசோதனை: 11 பேரில் 8 பேர் ஆப்செண்ட்!
செல்போன் வெடித்து சிறுமி உயிரிழப்பு!