Plan to open Villivakkam lake in Chennai

சென்னை வில்லிவாக்கம் ஏரியை விரைவில் திறக்க திட்டம்!

தமிழகம்

சென்னை வில்லிவாக்கம் ஏரி சீரமைப்பு பணியை முடித்து நவம்பருக்குள் ஏரியைத் திறக்க திட்டமிட்டுள்ள சென்னை மாநகராட்சி, 2-வது கட்டமாக 8.5 ஏக்கரை சீரமைக்க முடிவு செய்துள்ளது.

39 ஏக்கர் பரப்பிலான வில்லிவாக்கம் ஏரி சென்னை குடிநீர் வாரியம் வசம் இருந்தது. மாசுபட்டுக் கிடந்த இந்த ஏரியைச் சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.16 கோடியில் மறுசீரமைப்பு பணி கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

பின்னர் திட்ட மதிப்பீடு ரூ.45 கோடியாக உயர்ந்தது. சீரமைப்பு பணிக்காகச் சென்னை குடிநீர் வாரியம் தன்வசம் 11.50 ஏக்கர் பரப்பை மட்டும் வைத்துக்கொண்டு (கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க), மீதம் உள்ள 27.50 ஏக்கர் பரப்பை மாநகராட்சி வசம் ஒப்படைத்தது.

அப்போது அந்த ஏரியின் ஆழம் ஒரு மீட்டராக மட்டுமே இருந்தது. சீரமைப்பு பணியில் சுமார் 5 மீட்டர் ஆழம் வரை தூர்வாரப்பட்டது.  அதன் நீர் கொள்திறன் 70,000 கன மீட்டர் அளவுக்கு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், இதில் நடைபாதை, சுற்றுச்சுவர், படகு சவாரி, வாகன நிறுத்தம், உணவகம், ஆவின் பாலகம், இசை நீரூற்று, 12டி திரையரங்கம், மோனோ ரயில் சேவை, நீர் விளையாட்டு உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகச் சென்னையின் முதல் கண்ணாடி தொங்கு பாலம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. 250 மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலத்தில், ரூ.8 கோடி செலவில் இது அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வில்லிவாக்கம் ஏரி பகுதியில் சென்னை குடிநீர் வாரியம் நவீன சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் 3 ஏக்கர் நிலம் போக, மீதம் உள்ள 8.5 ஏக்கர் பரப்பை சென்னை மாநகராட்சியிடம் வழங்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

மேலும், மாநகராட்சி சார்பில் ஏற்கெனவே சீரமைக்கப்பட்டு வரும் ஏரியுடன் இந்தப் பகுதியை இணைத்து ஏரியின் பரப்பை அதிகரிக்கலாம்.

இணைக்க இருக்கும் பகுதியை மேலும் ஆழமாக்கி புதிய நீர்த்தேக்கமாகவும் மாற்றலாம் என்று தெரிவித்தது. இந்த நிலையில், இந்த 8.5 ஏக்கர் நீர் தேக்கம் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக பேசியுள்ள அதிகாரிகள், “சென்னை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 27.50 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வரும் பணிகள் இறுதிகட்ட நிலையில் உள்ளது.

இந்த திட்டத்தின் முதல் கட்டம் வரும் தீபாவளிக்குள் பயன்பாட்டுக்கு வரும். 2 வது கட்டம் பொங்கலுக்குள் பயன்பாட்டுக்கு வரும்.

இந்த நிலையில், வில்லிவாக்கம் ஏரி பகுதியில் மீதம் உள்ள 8.5 ஏக்கர் பரப்பளவில் புதிய ஏரி அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ரூ.7.50 கோடியில் இந்த ஏரி உருவாக்கப்படவுள்ளது.

இந்த சீரமைப்பு பணியில், பூங்காவை சுற்றிச் சுற்றுச்சுவர், வாகன நிறுத்த இடம், மீன் பிடிக்கும் இடம், படகு சேவை, நடைபாதை உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளன” என்று தெரிவித்துள்ளனர்.

ராஜ்

கிச்சன் கீர்த்தனா: கேழ்வரகுக் கூழ் (ஆடி ஸ்பெஷல்)

என்.எல்.சி. டென்ஷன்… இரவுப் பேருந்துகளுக்கு திடீர் உத்தரவு!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *