மாதங்கள் பன்னிரண்டாக இருந்தாலும், டிசம்பர் என்றால் கொஞ்சம் ஸ்பெஷல்தான். அதுவும் இந்த மாதத்தின் கடைசி வாரம் கூடுதல் ஸ்பெஷலாக இருக்கும். இதை வித்தியாசமாகக் கொண்டாட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு… குளிருக்கு இதமான, மனத்துக்கு சுகமான இந்த பிஸ்தா பாயசம் ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
பிஸ்தா (உப்பில்லாதது) – 100 கிராம்
துருவிய பிஸ்தா – ஒரு டீஸ்பூன்
ரவை – 3 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை – 10 டேபிள்ஸ்பூன்
பால் – அரை லிட்டர்
கன்டென்ஸ்ட் மில்க் – 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
பிஸ்தா எசன்ஸ் – அரை டீஸ்பூன்
பச்சை ஃபுட் கலர் – 1 சிட்டிகை (விரும்பினால்)
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
50 கிராம் பிஸ்தாவுடன் சிறிது பால் சேர்த்து விழுதாக அரைக்கவும். மீதமுள்ள பிஸ்தாவை சிறு துண்டுகளாக நறுக்கவும். அடுப்பில் வாணலி வைத்து நெய் சேர்த்து, நறுக்கிய பிஸ்தாவைச் சேர்த்து வதக்கவும் (லேசாக வறுத்தால் போதும்). இதில் ரவையைச் சேர்த்து 30 வினாடிகள் வதக்கவும்.
பின்னர் பால், அரைத்து வைத்துள்ள பாதாம் பேஸ்ட் சேர்த்துக் கிளறவும். சர்க்கரை சேர்த்து, ரவை நன்றாக வேகும்வரை மிதமான தீயில் வேகவிடவும்.
வெந்ததும் கன்டெண்ஸ்ட் மில்க், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். பாயசம் கெட்டியானதும் எசன்ஸ், ஃபுட் கலர் சேர்த்து இறக்கவும். நறுக்கிய பிஸ்தா தூவிப் பரிமாறவும்.