பல்வேறு நாடுகளின் மக்களால் விரும்பப்படும் நொறுக்குத்தீனி சமோசா. இது செய்முறை வடிவில் வேறுபட்டு இருந்தாலும், பெரும்பாலும் முக்கோண வடிவங்களிலேயே செய்யப்படுகிறது. இந்த பின்வீல் சமோசா வடிவத்தில் மட்டுமல்ல… டொமேட்டோ சாஸுடன் சாப்பிட சுவையாகவும் இருக்கும். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
என்ன தேவை?
மைதா மாவு – 250 கிராம்
உருளைக்கிழங்கு – 300 கிராம்
ஓமம் – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – அரை கைப்பிடி அளவு
இஞ்சி – பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
மைதா மாவில் 3 டீஸ்பூன் எண்ணெய், ஓமம், தேவையான அளவு உப்பு சேர்த்து பூரி மாவு போல் கெட்டியாகப் பிசைந்து 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்துத் துருவிக்கொள்ளவும். அதில் மிளகாய்த்தூள், சீரகத்தூள், தேவையான அளவு உப்பு, கரம் மசாலாத்தூள், இஞ்சி – பூண்டு விழுது, எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கலக்கவும். மைதா மாவைச் சம அளவாகப் பிரித்து மூன்று உருண்டைகள் செய்யவும். ஓர் உருண்டையை எடுத்து மாவு தொட்டு மெல்லிய சப்பாத்தியாகத் திரட்டிக்கொள்ளவும். உருளைக்கிழங்கு மசாலாவை ஒரு ஸ்பூனால் சப்பாத்தியின் மேல் பரப்பிவிடவும். இப்போது சப்பாத்தியை இறுக்கமாகச் சுருட்டவும். ஒரு கத்தியால் அதை சம பாகங்களாக வெட்டிக்கொள்ளவும்.வெட்டிய பாகங்களை நேராக நிறுத்தி கையால் தட்டையாக அழுத்திவிடவும். 2 டீஸ்பூன் மைதா மாவை நீர்க்கக் கரைத்து வைக்கவும். செய்துவைத்துள்ள பின்வீல் சமோசாக்களை மைதா கரைசலில் முக்கியெடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். மற்ற உருண்டைகளையும் இதேபோல் செய்து கொள்ளவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: கொட்டை பழக்கலவை!
சண்டே ஸ்பெஷல்: சாப்பாட்டுக்குப் பிறகு வரும் தூக்கம்… தீர்வு என்ன?