சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் ‘இளஞ்சிவப்பு ஆட்டோ’ (Pink Auto) திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியமாக தலா ரூ. 1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி, ரூ.2 கோடி செலவில் 200 பிங்க் ஆட்டோ திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ”பெண்களின் பாதுகாப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது, அதனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், ஒரு புதிய முன்னெடுப்பாக ‘இளஞ்சிவப்பு ஆட்டோக்களை’ தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க, பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 ஆட்டோக்கள் சென்னை மாநகரில் இயக்கப்பட உள்ளன.
அவசர காலங்களில் புகார் பெறப்பட்டவுடன், காவல் துறையின் மூலம் விரைவான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும் நோக்கத்தோடு ஒவ்வொரு இளஞ்சிவப்பு ஆட்டோவிலும், பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட ஜிபிஎஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
பெண்கள் சுய தொழிலில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்தவும், ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இத்திட்டம் வழிவகை செய்யும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தேவையான தகுதிகள்:
* பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
* கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
* 25 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
* 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
* சென்னையில் குடியிருக்க வேண்டும்
இதற்கென, சென்னையில் உள்ள 250 பெண்களுக்கு தலா ரூ.1 லட்சம் தமிழ்நாடு அரசு CNG/Hybrid ஆட்டோ வாங்க மானியமாக வழங்கும். ஆட்டோ வாங்க தேவைப்படும் மீதி பணத்திற்காக வங்கிகளுடன் இணைக்கப்படும்.
சென்னையில் உள்ள தகுதியான பெண் ஓட்டுநர்கள், இத்திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ‘சென்னை மாவட்ட சமூக நல அலுவலர், 8வது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை-1’ என்ற முகவரிக்கு வரும் நவம்பர் 23ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
காமன்வெல்த் போட்டியில் ஹாக்கி நீக்கம்… பின்னணி என்ன?
ED ரெய்டு : வீட்டின் முன் குவிந்த ஆதரவாளர்கள்… கிளம்ப சொன்ன வைத்திலிங்கம்