இரசாயன வண்ணம் கலந்து பிள்ளையார் சிலைகளைக் கடலில் கரைப்பதால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதாக பூவுலகின் நண்பர்கள் ஜி.சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (ஆகஸ்ட் 31) தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும், யூடியூப் வலைதளத்திலும் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “இரசாயன வண்ணங்கள் மற்றும் பிஓபி கொண்டு செய்யப்படும் சிலைகள் கடலில் உள்ள உயிர்வளியை குறைக்கும். அதனால் கடலில் வாழும் சிறுசிறு உயிரினங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்.
அந்தச் சிறுசிறு உயிரினங்கள்தான் சிறிய மீனுக்கான உணவு. அந்தச் சிறிய மீன்தான் பெரிய மீனுக்கான உணவு. அந்த பெரிய மீன்தான் நமக்கான உணவு.
அப்படி நல்ல ஊட்டச்சத்துமிகுந்த மீன் நமக்கு வேண்டுமென்றால், செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பிள்ளையார் சிலைகளைக் கடலில் கரைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அதுபோல், காலநிலை மாற்றத்தால் இன்று கடலின் அமிலத்தன்மை அதிகரித்து வருகிறது. அதனாலும் கடல்வாழ் உயிரினங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும். ஏற்கெனவே அணுமின் மற்றும் ரசாயனக் கழிவுகள் கடலில் கொட்டப்படுகிறது.
இந்தச் சூழலில் பிள்ளையார் சிலைகள் கடலில் கரைக்கப்படும்போது இன்னும் கடலில் அமிலத்தன்மை அதிகரிக்கும். இதனால், நமக்கும் பாதிப்பு ஏற்படும்.
கடலில் கரைக்கப்படும் பிள்ளையார் சிலைகளின் சிறு துகள்களை மீன்கள் சாப்பிடுவதால், அதன்மூலம் நமக்கும் உணவுச் சங்கிலி பிரச்சினை ஏற்படும்.
அடுத்து நமக்குத் தேவையான ஆக்சிஜனை 70 சதவிகிதம் தயாரிப்பது கடல்தான். ஆக, மனிதர்களுக்கு உயிர்வளியை தருவது கடல்தான். கடலில் வாழும் சிறுசிறு உயிரினங்கள்தான் உணவு தயாரிக்கும் முறையில் ஆக்சிஜனை வெளியிடுகிறது.
ஆகையால், கடல்வாழ் உயிரினங்களுக்கும் நமக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ள ரசாயண வண்ணம் கலந்த பிள்ளையார் சிலைகளைக் கடலில் கரைக்க வேண்டாம்” என அதில் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: எடப்பாடியையும் விசாரிக்க வேண்டும்-பூவுலகின் நண்பர்கள்!