கலைஞர் நினைவாக கடல் நடுவே வைக்கப்படும் பேனா சின்னத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞருக்கு, மெரினாவில் அவரது நினைவிடத்துக்கு அருகே கடலுக்குள் பேனா சின்னம் அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டது.
ரூ.81 கோடி செலவில், 42 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படும் இந்த சின்னத்துக்குத் தமிழக கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி வழங்கியது.
ஆனால் இதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் பேனா சின்னத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வழக்குத் தொடர்ந்தார். இதில் மெரினாவில் தலைவர்களின் உடல்களைப் புதைக்க அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்த வழக்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மெரினா காமராஜர் சாலையில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் எம்ஜிஆர் நினைவிடங்கள், சென்னை சிட்டி முனிசிபல் சட்டம் 1919 பிரிவு 319(3) படி அறிவிக்கப்பட்ட இடுகாடு என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பேனா சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த நல்லதம்பி, ராயபுரத்தைச் சேர்ந்த தங்கம், நாகர்கோவிலைச் சேர்ந்த கோபால் ஆகிய மீனவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மெரினா கடலில் பேனா சின்னம் அமைக்கப்பட்டால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும், 32 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 4 லட்சம் மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறிக்குள்ளாகும்.
எனவே வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்திட்டத்தைக் கைவிடத் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
பிரியா
விமர்சனம்: சந்தீப்பை ‘ஸ்டார்’ ஆக்குமா மைக்கேல்
குக்கர் கிடைக்காததற்கு, பாஜகவின் ப்ரஷர் காரணமா? தினகரன் விளக்கம்!