மாணவி மரணத்தால் சூறையாடப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளியை திறக்க அனுமதி கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி +2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13ம் தேதி அதிகாலை பள்ளியின் தரைதளத்தில் இறந்து கிடந்தார்.
மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி 17ம் தேதி பொதுமக்கள், இளைஞர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பள்ளியின் பேருந்துகள் எரிக்கப்பட்டன. வகுப்புகள் சூறையாடப்பட்டன. இதனால் பள்ளி மூடப்பட்டது.
இந்தநிலையில் பள்ளியை சீரமைத்து திறக்க அனுமதி கேட்டு பள்ளி நிர்வாகத்தினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதால் பள்ளியை சீரமைக்கவும், திறக்கவும் அனுமதி வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி அப்துல் குத்தூஸ் இன்று (ஆகஸ்ட் 23) விசாரித்தார். அப்போது பள்ளியை திறப்பதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில் பள்ளியை சீரமைக்க அனுமதி வழங்கக்கூடாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் கல்வி கற்க ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பள்ளி தாளாளரின் மகன் மீது குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் அதுபற்றி விசாரணை நடைபெற்று வருவதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பள்ளியை திறப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகமும், பள்ளிக் கல்வித்துறையும் 10 நாட்களில் முடிவெடுக்கவேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.
கலை.ரா
கள்ளக்குறிச்சி கலவரம் : சிறப்பு புலனாய்வு குழுவின் அடுத்தகட்ட டார்கெட் யார்?