சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்குள் கைலி, சட்டையுடன் புகார் அளிக்க சென்ற நபரை, போலீசார் தடுத்து நிறுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் என பலரது நடிப்பில் 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் நேரடியாக ஓடிடியில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்‘. இப்படம் வசூல்ரீதியாக வெற்றிபெற்றதுடன் நல்ல வரவேற்பையும் பெற்றது. அதேநேரத்தில் ஜாதி தொடர்பான விவாதங்களையும் சந்தித்தது.
இதுதொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 11) நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இயக்குநர் த.ச.ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா ஆகிய இருவருக்கு எதிராகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஜெய்பீம் படத்தின் முக்கிய கதாபாத்திரமான ராஜாக்கண்ணுவின் உறவினரான, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த குறவர் இனத்தை சேர்ந்த குளஞ்சியப்பன், ஜெய்பீம் படம் தொடர்பாக இன்று (ஆகஸ்ட் 12) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தார். அப்போது அவர் கைலி, சட்டையுடன் இருந்ததால் போலீசார் அவரை தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தனர்.
லுங்கி கட்டிக்கொண்டு வரும் நபர்கள் யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை என போலீசார் தெரிவித்ததையடுத்து, குளஞ்சியப்பன் செய்வதறியாமல் நின்றுள்ளார். பின்னர் அங்கிருந்த பத்திரிகையாளர்கள் விவரமறிந்து அவருக்கு வேட்டி எடுத்து வந்து கொடுத்து உதவியுள்ளனர். அதைக் கட்டிக்கொண்டு பின்னர் புகார் அளிக்க காவல் ஆணையர் அலுவலகத்துக்குச் சென்றார்.
குளஞ்சியப்பனை காவல் ஆணையர் அலுவலகத்துக்குள் அனுமதிக்காத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சாமானிய மக்களும் அவரவர் உடைகளில் வந்து செல்வதற்கு ஏற்றவகையில் அனுமதி வழங்க வேண்டும் என காவல் ஆணையருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க லுங்கி அணிந்து வந்தவரை காவலர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை என தகவல். லுங்கி தடை செய்யப்பட்ட ஆடையா?. சாமானிய மக்கள் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வரக்கூடாது என மறைமுகமாக சொல்லப்படுகிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெ.பிரகாஷ்
‘அவ்ளோ அன்பு’ : ட்விட்டரில் இணைந்த விக்ரம்