ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு தமிழகம் முழுவதும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று தமிழகத்தின் 51 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தமிழக உள்துறை மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் மனு அளிக்கப்பட்டது.
ஆனால் அதன் மீது எந்த முடிவெடுக்கப்படாததால், அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி சென்னையை சேர்ந்த சுப்ரமணியன், கடலூரை சேர்ந்த சண்முகசுந்தரம், ஈரோட்டை சேர்ந்த செந்தில்நாதன் உள்ளிட்ட 9 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இந்தநிலையில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பதாக இன்று(செப்டம்பர் 29) காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
சட்டம் – ஒழுங்கை காரணம் காட்டி நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யும் வகையில் அரசு உத்தரவிட்டுள்ளதாக ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய விண்ணப்பதாரர்களுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.
மனு எண்ணிடப்பட்டால் நாளை விசாரணைக்கு எடுக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து தனியாக வழக்கு தொடரலாம் என்றும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கலை.ரா
பிஎஃப்ஐக்கு தடை : தமிழக அரசு அரசாணை!
எந்த ஊர்வலம், கூட்டத்துக்கும் அனுமதியில்லை : அரசு திட்டவட்டம்!