மாணவி ஸ்ரீமதி மரணத்தால் மூடப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளியில் நேரடி வகுப்புகள் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்திற்கு அருகே உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் +2 படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த ஜூலை மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
மாணவியின் மரணத்திற்கு நியாயம் கேட்டு நடந்த போராட்டம் வன்முறையாக மாறி பள்ளி சூறையாடப்பட்டது. இதனால் பள்ளி முற்றிலும் சேதமடைந்தது.
இந்தநிலையில் பள்ளியில் சீரமைப்பு பணிகள் முடிந்துவிட்டதால், பள்ளியை திறக்க அனுமதிக்கவேண்டும்.

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி தரவேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு இன்று(நவம்பர் 30) விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிசிஐடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விசாரணை முழுமையாக முடிந்துவிட்டதாகவும் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
பள்ளியை முழுமையாக திறப்பது குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு தரப்பில், மாவட்ட ஆட்சியர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் பள்ளியை திறப்பதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
2 வாரங்களுக்குள் அரையாண்டு தேர்வுகள் வர இருப்பதால் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த அனுமதியளிக்கவேண்டும் என்று பள்ளி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் மாணவியின் பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பள்ளியை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அனுமதி இல்லாத கட்டிடத்தில் சில வகுப்பறைகளும், விடுதியும் செயல்பட்டு வந்ததாகக் குற்றம்சாட்டினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பள்ளியில் இருக்கக்கூடிய 4 பிளாக்குகளில், விடுதி அமைந்திருக்கக்கூடிய ஏ பிளாக்கில் 3 ஆவது தளத்தை மட்டும் பயன்படுத்தக்கூடாது.
பி பிளாக்கை முழுமையாகவும், சி, டி ஆகிய பிளாக்குகளில் குறிப்பிட்ட சில தளத்தை மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.
வகுப்புகளை பொறுத்தவரை 9,10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை நடத்தலாம் என ஆணைப் பிறப்பித்தார்.
சோதனை அடிப்படையில் டிசம்பர் 5 ஆம் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு அமல்படுத்த உத்தரவிட்ட நீதிபதி சுரேஷ்குமார், வழக்கு விசாரணையை ஜனவரி 2 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
கலை.ரா