சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நிரந்தர தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த டி.ராஜா கடந்த மே 24ஆம் தேதி ஓய்வு பெற்றார்.
இதையடுத்து மீண்டும் பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி எஸ்.வைத்தியநாதனைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் 9 மாதங்களுக்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நிரந்தர தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

“இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 217 வது பிரிவு (1) மூலம் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்” என்று குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2022 செப்டம்பரில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த முனீஸ்வர் நாத் பண்டாரி ஓய்வு பெற்ற பிறகு, 9 மாதங்களாக நிரந்தர தலைமை நீதிபதி பதவி காலியாக இருந்தது.
தொடர்ந்து நீதிபதி துரைசாமி, நீதிபதி டி. ராஜா மற்றும் நீதிபதி வைத்தியநாதன் ஆகியோர் பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து வந்த நிலையில் இன்று நிரந்தர நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரியா