permanent book garden in chennai

சென்னையில் நிரந்தர புத்தக பூங்கா: முதல்வர்!

தமிழகம்

புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் நிரந்தர புத்தக பூங்கா அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனத்தில், 46ஆவது சென்னைப் புத்தகக் காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 6) தொடங்கி வைத்தார். பின்னர் புத்தக் காட்சி அரங்கில் அமைக்கப்பட்டுள்ள புத்தக அரங்குகளை பார்வையிட்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,

permanent book garden in chennai

’தாய்க்குத்‌ தமிழ்நாடு எனப்‌ பெயர்‌ சூட்டிய தலைமகன்‌’ நம்முடைய ஒப்பற்ற தலைவர்‌ பேரறிஞர்‌ பெருந்தகை அறிஞர்‌ அண்ணா அவர்களின்‌ பெயரில்‌ அமைந்துள்ள நூற்றாண்டு நினைவு நூலகத்தில்‌, அமைந்திருக்கக்கூடிய அரங்கத்தில்‌ இலக்கியத்‌ திருவிழாவை இன்று காலையில்‌ நான்‌ தொடங்கி வைத்தேன்‌.

அதைத்‌ தொடர்ந்து மாலையில்‌ இந்த புத்தகக்‌ காட்சியைத்‌ தொடங்கி வைக்கக்கூடிய வாய்ப்பை நான்‌ பெற்றிருக்கிறேன்‌. ஆக, இந்த இரண்டு நிகழ்ச்சிகளுமே நம்மைப்‌ பொறுத்தவரையில்‌ திருவிழாக்கள்‌.

அதுவும்‌ அறிவுத்‌ திருவிழாக்களாக அமைந்திருக்கிறது, இன்னும்‌ சொல்ல வேண்டுமென்று சொன்னால்‌ தமிழ்த்‌ திருவிழாக்களாக அமைந்திருக்கிறது என்று சொன்னால்‌, அது மிகமிக பொருத்தமாக இருக்க முடியும்‌.

தமிழ்நாட்டில்‌ இப்போது நடந்து கொண்டிருக்கக்கூடிய ஆட்சி தமிழாட்சி என்பது உங்கள்‌ அனைவருக்கும்‌ நன்றாகத்‌ தெரியும்‌.

ஒருகாலத்தில்‌ சென்னையில்‌ மட்டுமே புத்தகக்‌ கண்காட்சி நடந்து வந்தது. அதைத்‌ தொடர்ந்து ஒரு சில மாவட்டங்களில்‌ நடக்கக்கூடிய வாய்ப்பைப்‌ பெற்றிருக்கிறது. புத்தக வாசிப்பில்‌ ஆர்வம்‌ இருக்கக்கூடிய ஆட்சித்‌ தலைவர்கள்‌, அந்த ஆட்சியர்கள்‌ அவரவர்‌ மாவட்டத்திலே அதற்கான முயற்சிகளை எடுத்தார்கள்‌.

அந்த புத்தகக்‌ கண்காட்சியைத் தொடர்ந்து நடத்திக்‌ கொண்டிருக்கிறார்கள்‌. கடந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களிலும்‌ இந்த புத்தகக்‌ காட்சிகள்‌ நடத்துவதற்கு நம்முடைய அரசு ஆணையிட்டது. அதற்காக 5 கோடியே 50 லட்சம்‌ ரூபாய்‌ நிதியை ஒதுக்கீடும்‌ செய்திருக்கிறோம்‌. அதன்‌ விளைவாக, தமிழ்நாட்டில்‌ பெரும்பாலான மாவட்டங்களில்‌ புத்தகக்‌ கண்காட்சிகள்‌ நடக்கத்‌ தொடங்கி இருக்கின்றன.

பத்து நாட்கள்‌, இரண்டு வாரங்கள்‌ என நடக்கும்‌ இந்த புத்தகச்‌ சந்தைகள்‌ மூலமாகப்‌ புத்தக விற்பனை மட்டுமல்ல – சிறப்பான சொற்பொழிவாளர்களைக்‌ கொண்ட இலக்கிய நிகழ்ச்சிகளும்‌ நடத்தப்படுகின்றன.

இதன்‌ மூலமாக மாவட்டந்தோறும்‌ இலக்கிய எழுச்சி – அறிவு மலர்ச்சி ஏற்பட்டு வருகிறது. வழக்கமாக, சென்னைப்‌ புத்தகக்‌ காட்சிக்காக அரசின்‌ சார்பில்‌ 75 லட்சம்‌ ரூபாய்‌ வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று நோய்‌ வந்த காரணத்தால்‌, பதிப்பாளர்கள்‌ வாழ்வாதாரம்‌ பாதிக்கப்பட்ட சூழலை மனதில்‌ கொண்டு பபாசி அமைப்பினர்‌ கூடுதல்‌ நிதியை அரசிடம்‌ கேட்டார்கள்‌.

அவர்கள்‌ கோரிக்கையை ஏற்றுக்‌ கொண்டு உடனடியாக அதை ஏற்று 50 லட்சம்‌ ரூபாயை அன்றைக்கு அரசின்‌ சார்பில்‌ நாம்‌ வழங்கினோம்‌. இந்தத்‌ தொகை சங்க உறுப்பினர்களாக இருக்கும்‌ 277 பேருக்கு தலா 14 ஆயிரம்‌ ரூபாயும்‌ – உறுப்பினர்‌ அல்லாத 113 பேருக்கு தலா 10 ஆயிரம்‌ ரூபாயும்‌ பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என்பதை நான்‌ அறிவேன்‌.

பதிப்பகங்களுக்கு உதவிகள்‌ செய்வதும்‌, எழுத்தாளர்களுக்கு விருதுகள்‌ வழங்குவதும்‌ நாட்டில்‌ அறிவொளி பரவ வேண்டும்‌ என்பதற்காகத்தான்‌. ‘வீட்டுக்கு ஒரு நூல்‌ நிலையம்‌ அமைய வேண்டும்‌’ என்று ஆசைப்பட்டவர்‌ பேரறிஞர்‌ அண்ணா.

அத்தகைய நோக்கத்தை உருவாக்கவே, மாவட்டம் தோறும்‌ புத்தகக்‌ கண்காட்சிகளையும்‌, இலக்கிய விழாக்களையும்‌ நடத்துவதற்கு அனைத்து விதமான உதவிகளையும்‌ அரசு செய்து கொண்டிருக்கிறது.

தமிழின்‌ மீதும்‌ புத்தகங்களின்‌ மீதும்‌, எழுத்தின்‌ மீதும்‌, எழுத்தாளர்கள்‌ மீதும்‌ மாறாக்‌ காதல்‌ கொண்டவர்‌ முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ . இதுபோன்ற கண்காட்சியின்‌ தொடக்க விழாவுக்காகக் கடந்த 2008-ஆம்‌ ஆண்டு அன்றைக்கு நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில்‌ கலந்துகொண்டு நம்முடைய கலைஞர்‌ உரையாற்றினார்கள்‌, சிறப்பித்தார்கள்‌.

ஒரு கோடி ரூபாயை வழங்கி, எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும்‌ பொற்கிழி விருது வழங்கி உற்சாகப்படுத்தச்‌ சொன்னார்கள்‌.

“தமிழினத்‌ தலைவர்‌’ கலைஞர்‌ அவர்களின்‌ பெயரால்‌ அமைந்திட அந்த
விருதினைப்‌ பெற்றிருக்கக்கூடிய

  • மொழியியல்‌ அறிஞர்‌ பா.ரா.சுப்பிரமணியன்‌
  • கவிஞர்‌ தேவதேவன்‌
  • மொழிபெயர்ப்பாளர்‌ சி.மோகன்‌
  • நாடகக்‌ கலைஞர்‌ பிரளயன்‌
  • நாவலாசிரியர்‌ தேவிபாரதி
  • சிறுகதையாசிரியர்‌ சந்திரா தங்கராஜ்‌

ஆகியோரை நான்‌ பாராட்டுகிறேன்‌, அவர்களுக்கெல்லாம்‌ என்னுடைய வாழ்த்துகளையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. முதலமைச்சர்‌ என்ற முறையில்‌ மட்டுமல்ல, தமிழரையும்‌ – தமிழ்ப்‌ படைப்பாளிகளையும்‌ உயிரென நேசித்த முத்தமிழறிஞர்‌ தலைவர்‌ கலைஞருடைய மகனாகவும்‌ நான்‌ அவர்களை வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறேன்‌.

அடுத்த ஆண்டு முத்தமிழறிஞர்‌ கலைஞருடைய நூற்றாண்டாக அமைந்திருக்கக்கூடிய நிலையில்‌, 2008- ஆம்‌ ஆண்டு முதல்‌ வழங்கப்பட்டு வரக்கூடிய இந்த விருதைப்‌ பெற்றவர்களின்‌ எண்ணிக்கை இந்த ஆண்டு வரை 100 பேர்‌ என்ற எண்ணிக்கையைத்‌ தொட்டிருக்கிறது. எத்தனைப்‌ பொருத்தமாக அமைந்திருக்கிறது என்பதை எண்ணி நாம்‌ மகிழ்ச்சி அடைகிறோம்.

நிரந்தரமாகப் புத்தகப் பூங்கா அமைப்பதற்காகச் சென்னையில் இடம் வழங்கப்படும் என்று கலைஞர் அறிவிப்பு செய்தார். கடந்தாண்டு அந்த வாக்குறுதியை நானும் நினைவுபடுத்தியிருக்கிறேன். இடம் தேர்வு செய்யப்பட்டதும் அதுதொடர்பான முறையான அறிவிப்பை நான் வெளியிடுவேன்‌” என்றார்.

மோனிஷா

நேருக்கு நேர் மோதிய விஜய்-அஜித் படங்கள் எவை?

ஜெய் ஷாவை டார்கெட் செய்த பாகிஸ்தான் தலைவருக்கு பதிலடி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *