பெரியார் சிலை சர்ச்சை : கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்!

தமிழகம்

பெரியார் சிலையை உடைக்கவேண்டுமென பேசிய சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருக்கிறது.

இந்து முன்னணி அமைப்பு சார்பில் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழா சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெற்றது.

அதில் கலந்துகொண்ட இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென ஆக்ரோசமாக பேசியிருந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

அவர் மீது தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து தலைமறைவான கனல் கண்ணன்  ஆகஸ்ட் 11ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன்பிறகு ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை எழும்பூர் நீதிமன்றமும், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன.

பின்னர் கனல் கண்ணன் தரப்பில் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு கடந்த மாதம் 29ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தார்.

இந்த நிலையில், கனல் கண்ணன் ஜாமீன் மனு இன்று(செப்டம்பர் 1) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது வெறுப்பை தூண்டும் வகையில் பேசியுள்ளதால் கனல் கண்ணுக்கு ஜாமீன் வழங்க காவல் துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  

ஆனால் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.

4 வார காலத்திற்கு விசாரணை அதிகாரி முன்பு காலை மற்றும் மாலையில் ஆஜராகி கையெழுத்திடவும், இனி இது போன்று பேசமாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

நீங்கள் ஒரு கட்சியில் இருக்கும் போது மாற்று கொள்கை உடையவர் குறித்து ஏன் பேச வேண்டும்?

என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, இது போன்ற தேவையற்ற கருத்துகளை யூ.டியூபில் பேசுவது ஃபேசனாகி விட்டது எனவும் கண்டனம் தெரிவித்தார்.

கலை.ரா

பூலித்தேவன் பிறந்தநாள்: பதற்றத்தில் தென்மாவட்டங்கள்! காரணம் என்ன?

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0