சாராய வியாபாரிகளால் 2 இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தின் எதிரொலியாக, பெரம்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய 19 போலீசாரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். perambalur police transferred by sp
மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரக்கத்துக்கு உட்பட்டது முட்டம் கிராமம். இங்கு அனுமதியின்றி தெருவில் சிலர் சாராயம் விற்று வந்தனர். அவர்களை கடந்த மாதம் அந்த பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் (25) சக்தி (20) மற்றும் ஆஜய் (19) ஆகிய இளைஞர்கள் கண்டித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த சாராய வியாபாரிகளான ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை ஆகியோர் கடந்த மாதம் 14ஆம் தேதி இரவில் தட்டிக்கேட்ட இளைஞர்களை கத்தியால் சரமாரியாக தாக்கி குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதில் படுகாயமடைந்த ஹரிஷ், சக்தி இருவரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
இளைஞர்கள் கொலைக்கு நீதிகேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களை நேரில் சந்தித்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், கொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

போலீசார் கூண்டோடு மாற்றம்! perambalur police transferred by sp
தொடர்ந்து இந்த இரட்டைக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த பெரம்பூர் காவல் நிலைய போலீசார், சாராய வியாபாரிகள் மூவர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த சம்பவத்தின் எதிரொலியால் பெரம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் நாகவள்ளி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், எஸ்பி தனிப்பிரிவு போலீஸ் பிரபாகர், உதவி ஆய்வாளர்கள் மணிமாறன், சங்கர் என தற்போது பெரம்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய 19 போலீசாரையும் கூண்டோடு பணியிட மாற்றம் செய்து மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.