மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்!
பெரம்பலூரில் விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெறும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த பயிற்சியாளர் மீது சிபிசிஐடி விசாரணை கோரி இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு பின்புறம் அரசு மகளிர் விளையாட்டு விடுதி உள்ளது.
இந்த விடுதியில் தங்கி பயிற்சி மேற்கொண்டு வரும் பத்திற்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு,
கடந்த ஒரு வருடமாக டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜ் பாலியல் தொந்தரவு அளித்தாக மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ் குமாரிடம் மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் அவர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் தர்மராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நேற்று (டிசம்பர் 15) இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மாவட்ட செயலாளர் கல்யாணி, “பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு பின்புறமுள்ள மாவட்ட விளையாட்டு விடுதியில் பல மாவட்டங்களில் இருந்து மாணவிகள் தங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வரும் தர்மராஜ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். உடனடியாக மாணவிகள் மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ் குமாரிடம் புகார் கொடுத்துள்ளனர். அவர் மாணவிகளை சமாதானப்படுத்தியுள்ளார்.
ஆனால் மாணவிகளுக்கு பாலியல் ரீதியான பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் கோபிநாத் தலைமையில் மாணவிகளிடம் விசாரணை நடத்தியதில்,
பயிற்சியாளர் தர்மராஜ் மாணவிகளுக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது.
அவர் டிசம்பர் 7-ஆம் தேதி பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து தர்மராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இன்று வரை தர்மராஜ் மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த அரசு அலுவலர்கள் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும். தர்மராஜ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அரசு அலுவலர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார். அவர் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு மாணவிகள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
இசை எதுவானாலும் தமிழிற்கு முன்னுரிமை கொடுங்கள்: மு.க.ஸ்டாலின்