பெரம்பலூர் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநர் உள்பட மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லை சேர்ந்த குப்புசாமி தனது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருடன் திருவண்ணாமலைக்கு வேனில் சென்றுள்ளார். நேற்று திருவண்ணாமலையில் இருந்து மீண்டும் திண்டுக்கல்லுக்கு வேனில் திரும்பியுள்ளனர்.

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே அதிகாலை 2.30 மணியளவில் வேன் வந்துகொண்டிருந்தபோது முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதியது. இந்த விபத்தில் டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிராக்டர் டிரைவர் சாமி தாஸ் மற்றும் அவருடைய உதவியாளர் சேகர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். வேனில் சென்றவர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது.
விபத்து குறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விபத்து ஏற்பட்ட இடத்திற்கு சென்ற 108 ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜேந்திரன் மற்றும் உதவியாளர் ஆகியோர் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்துகொண்டிருந்த ஆம்னி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரை தாண்டி காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜேந்திரன் மற்றும் வேனில் பயணம் செய்து காயமடைந்த குப்புசாமி, கவிப்பிரியா ஆகியோர் மீது மோதியது. இந்த விபத்தில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உடனடியாக விபத்து நடைபெற்ற இடத்திற்கு வந்த பெரம்பலூர் நகர காவல்துறையினர் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
செல்வம்