தமிழகத்தின் தனிநபர் வருமானம் கடந்த இரண்டு ஆண்டுகளில், தேசிய அளவிலான தனிநபர் வருமானத்தைவிட அதிகமாக இருந்ததாக தமிழக அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் மதிப்பீடுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து திட்டம், வளர்ச்சித்துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி, நடப்பு மற்றும் நிலையான விலையில் 2022-23-ம் ஆண்டுக்கான விரைவு மதிப்பீடு மற்றும் 2023-24-ம் ஆண்டுக்கான முன்மதிப்பீடு ஆகியவற்றை பொருளியல் மற்றும் புள்ளியல் துறை தயாரித்துள்ளது.
தமிழகத்தின் மொத்த உற்பத்தி நிலையான விலையில் 2022-23-ம்ஆண்டில் ரூ.14,51,929 கோடியாகவும், நடப்பு விலையில் ரூ.23,93,364 கோடியாகவும், 2023-24-ம் ஆண்டு நிலையான விலையில் ரூ.15,71,368 கோடியாகவும், நடப்பு விலையில் ரூ.27,21,571 கோடியாகவும் இருந்தது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் நிலையான விலையில், 2022-23-ம் ஆண்டில் 8.13 சதவிகிதம், 2023-24-ம் ஆண்டில் 8.23 சதவிகிதமாகவும் இருந்தது. அதேநேரம், நடப்பு விலையில் 2022-23-ம் ஆண்டில் 15.48 சதவிகிதம்,2023-24-ம் ஆண்டில் 13.71 சதவிகிதமாகவும் இருந்தது. நாட்டின் மொத்தஉள்நாட்டு உற்பத்தியில், தமிழகத்தில் நடப்பு விலையில் 2022-23-ல் 8.88 சதவிகிதம், 2023-24-ல் 9.21 சதவிகிதமாகவும் இருந்தது. நிலையான விலையில் 9.03 மற்றும் 9.04 சதவிகிதமாகவும் இருந்தது.
தமிழகத்தின் பணவீக்க விகிதம் 2022-23-ல் 5.97 சதவிகிதம், 2023-24-ல் 5.37 சதவிகிதமாக இருந்தது. இதே காலகட்டத்தில், இந்தியப் பணவீக்க விகிதம் 6.65 மற்றும் 5.38 சதவிகிதமாகவும் இருந்தன. மாநிலத்தின் சராசரி பொருளாதார வளர்ச்சி, நிலையான விலையில் 2012 முதல் 21 வரை 5.80 சதவிகிதமாகவும், கடந்த 2021-24 வரை மூன்று ஆண்டுகளில் முறையே 7.89, 8.13, 8.23 சதவிகிதமாகவும் இருந்தது.
இதனால், 2012-21 வரையான முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து, 2021-24 என மூன்றாண்டுகளில் சராசரி வளர்ச்சி விகிதம் 8.08 சதவிகிதமாக உள்ளது. தமிழகத்தின் தனிநபர் வருமானம் நிலையான விலையில் 2022-23, 2023-24 ஆகிய இரண்டுஆண்டுகளில் தமிழக தனிநபர் வருமானம் தேசிய தனிநபர் வருமானத்தைவிட 1.68 மடங்கு அதிகமாக உள்ளது குறி்ப்பிடத்தக்கது.
அதேபோல், நடப்பு விலையில் தமிழகத்தின் தனிநபர் வருமானம் 2023-24-ம் ஆண்டில் தேசிய அளவில் தனிநபர் வருமானத்தைவிட 1.71 மடங்கு அதிகமாக இருந்தது. மேலும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில், உற்பத்தித் துறையின் பங்களிப்பு, நிலையான விலையில், முறையே 9.29 சதவிகிதம் மற்றும் 6.37 சதவிகிதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பணித்துறையானது 45.47 சதவிகிதமும், 45.90 சதவிகிதமும் பங்களித்தது. 2023-24-ம் ஆண்டில் பணித்துறை நிலையான விலையில்9.25 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது.
போக்குவரத்து, சேமிப்பு கிடங்கு மற்றும் தகவல் தொடர்பு துறைகளில் 8.76 சதவிகிதம், பிறவகை போக்குவரத்துத் துறையில் 7.46 சதவிகிதம்,நிதி தொடர்பான பணிகளில் 9.29 சதவிகிதம், கட்டடம், மனை துறையில்10.08 சதவிகிதம், பிறவகைப் பணிகளில் 9.96 சதவிகிதம் என வளர்ச்சி காணப்பட்டது. இதன்மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு பணித்துறை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதி்ப்பில் 2022-23-ல் நடப்பு விலையில் மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. நிலையான விலையில், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்துக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : சீன அதிபர் – பிரதமர் மோடி சந்திப்பு முதல் ‘அமரன்’ ட்ரெய்லர் ரிலீஸ் வரை!
கிச்சன் கீர்த்தனா : மினி பெப்பர் தட்டை
இதை தொட்ட நீ கெட்ட… அப்டேட் குமாரு
“சிறு மழைக்கே தாக்குப்பிடிக்காத சென்னை” – எடப்பாடி சுளீர்!
தொழிலாளர்கள் போராட்டத்தால் ரூ.840 கோடி இழப்பு: நீதிமன்றத்தில் சாம்சங் தகவல்!