தெருவுக்கு திடீரென சாவர்க்கர் பெயர்! பொதுமக்கள் எதிர்ப்பு!
கோவில்பட்டியில் திடீரென தெரு ஒன்றிற்கு மறைந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் சாவர்க்கர் பெயர் சூட்டப்பட்டதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த நகராட்சி அதிகாரிகள், அனுமதி பெறாமல் எழுதப்பட்ட தெரு பெயரை அழித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 20வது வார்டில் உள்ள தெருவுக்கு நேற்று திடீரென மறைந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் வீர சாவர்க்கர் பெயர் சூட்டப்பட்டிருந்தது.
அந்த தெருவின் தொடக்கத்தில் கோவில்பட்டி நகராட்சி, வீரசாவர்க்கர் தெரு என்று சுவற்றில் எழுதப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. .
சாவர்க்கர் பெயர் : பொதுமக்கள் எதிர்ப்பு!
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அங்குள்ள பொதுமக்கள் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு விரைந்து வந்த நகராட்சி அலுவலர்கள் தெருபெயரினை அழித்தனர்.
மேலும் தங்களிடம் எவ்வித முன் அனுமதி பெறாமல் சிலர் தாங்களாகவே தெருவிற்கு பெயர் சூட்டியதால் அதனை அழித்ததாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை யார் செய்தது என்று தெரியவில்லை. எனினும் 20வது வார்டில் பா.ஜ.கவை சேர்ந்த விஜயகுமார் என்பவர் நகர்மன்ற உறுப்பினராக உள்ள நிலையில், இந்து மகாசபா அமைப்பினை சேர்ந்த சிலர் தெரு சுவரில் சாவர்க்கர் பெயரை எழுதியதாக கூறப்படுகிறது.
தற்பொழுது வரை நகராட்சி அலுவலகத்தில் இருந்து புகார் எதுவும் வரவில்லை என்றும், புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
அக்னிபத் ஆர்.எஸ்.எஸ் கொள்கை திட்டம்: வைகோ